Showing posts with label இஸ்லாம் கூறும் குடும்பவியல். Show all posts
Showing posts with label இஸ்லாம் கூறும் குடும்பவியல். Show all posts

Monday, June 10, 2013

குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு (தொடர் - 3)

இஸ்லாம் கூறும் குடும்பவியல்
குடும்ப அமைப்பை சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு - தொடர் 3
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்ப அமைப்பையும் உறவையும் சீரழிக்கின்ற காரணங்களில் முதலாவதாக துறவறத்தைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம். குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் இரண்டாவது காரணம், ஃப்ரீ செக்ஸ் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடற்ற உடலுறவு முறையாகும்.

"நான் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போவேன். தினசரி ஒரு பெண்ணிடம் போய்விட்டு வருவேன், யாரும் அதைத் தடுக்கக் கூடாது' என்று ஓர் ஆண் கூறுவது. அதேபோன்று ஒரு பெண், "நான் எப்படி வேண்டுமானலும் எந்த ஆணோடும் போவேன். இது எங்களுக்குரிய உரிமை, எங்களது சுதந்திரம், எங்களது சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது' என்று கூறி தான்தோன்றித் தனமாகத் திரிவது.

இப்படிக் கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில்லாமல் உல்லாசமாக, கட்டுபாடற்று சுற்றித் திரிவதாகும். இவனுக்கு மனைவி யார்? இவளுக்குக் கணவன் யார்? கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பு இல்லாவிட்டால் பிறக்கின்ற குழந்தைக்குப் பொறுப்பு யார்? அந்தக் குழந்தையை யார் வளர்ப்பது? உறவு முறைகள் எப்படி வரும்? இதற்கெல்லாம் எந்த விடையும் கிடைக்காது.

சமூகத்தில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழலாம் என்கிற சிந்தாந்தமும் இன்றைய நவீன யுகத்தில் விதைக்கப்படுகிறது. அதை ஒரு புரட்சியாகவும் பலர் நினைக்கின்றனர். பெரிய பெரிய அறிஞர்களும் நீதிபதிகளும் கூட, கணவன் மனைவி எனும் குடும்ப அமைப்பு தேவையில்லை என்கிறார்கள். அதாவது கணவன் மனைவி என்பது போன்ற பொறுப்பைச் சுமக்காமல் 3 மாதத்திற்கோ, 6 மாதத்திற்கோ வாழ்ந்து பார்ப்போம். நன்றாக இருந்தால் தொடரலாம். இல்லையெனில் விட்டுவிட்டுச் செல்லலாம் என்கிறார்கள்.

இதில் புரிய வேண்டிய விஷயம், திருமணம் என்றால் பொறுப்பைச் சுமக்கிறோம் என்பதாகும். ஓர் ஆண் ஒரு பெண்ணோடு சேர்கிறான். அதன் பிறகு அவளுக்கு வருகின்ற நல்லது கெட்டதை இவன் சுமக்கிறான். இவனுக்கு ஏற்படும் நல்லது கெட்டதை அவள் சுமக்கிறாள். அவள் குழந்தையைச் சுமக்கும் போது இவன் அவளையும் சேர்த்துச் சுமக்கிறான். அவளது நலத்திற்காகப் பாடுபடுகிறான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தியாகம் செய்கிற இப்படியொரு அழகிய குடும்பவியலமைப்பை நாசமாக்குகின்ற சித்தாந்தம் தான் "கண்டதே காட்சி; கொண்டதே கோலம்' என்ற கட்டுப்பாடில்லாத சுதந்திரம்.

ஆண்-பெண் விஷயத்தில் எந்தச் சட்டமும் இருக்கக் கூடாது என்று ஒரு நடிகை பேசி, வழக்கெல்லாம் போடப்பட்டு, அதைத் தடுப்பதற்கு எந்தச் சட்டமும் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றமும் அதைச் சரி காண்பதைப் பார்க்கிறோம். இப்படியொரு கேடுகெட்ட சட்டம் நமது நாட்டில் இருக்கிறது. ஒரு ஆண் தான் விரும்பிய எந்தப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அது பலாத்காரம், வன்புணர்வு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்தச் சட்டத்தை மக்கள் அனைவரும் புறக்கணிப்பதிலிருந்தே இது கேடுகெட்டது என புரிந்து கொள்ள முடிகிறது.

சில கேடுகெட்ட இழிந்தவர்கள் தவறு செய்வதை நியாயப்படுத்துவதற்காக நமது நாட்டில் இந்தச் சுதந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள அனைவரும் தவறான கட்டுப்பாடற்ற பாலியல் உறவை ஆரம்பித்தால், குடும்பம் என்கிற கட்டமைப்பு காணாமல் போய்விடும்.

இந்தக் கட்டுபாடற்ற உடலுறவு முறையில் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள் தான். கொஞ்ச நேரம் தவறான சுகம் அனுபவிப்பதற்காக இதைச் சரி கண்டால், அதன் பிறகு உருவாகிற குழந்தையைச் சுமப்பது பெண் தான். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு எந்த நாதியும் இருக்காது. அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இருக்காது. அவர்கள் தங்கள் கையைக் கொண்டு தான் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் பெண்களின் பலவீனத்தைக் கவனித்துத் தான் குடும்ப அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

எனவே பெண்கள் இதை விரும்பி ஆதரிப்பது தவறான போக்காகும். உடலில் இளமையும் முறுக்கும் இருக்கும் போது இந்தக் கட்டுப்பாடற்ற உறவின் கேடு தெரியாது. ஆனால் ஒரு நேரம் வரும். அல்லாஹ் ஒரு நரம்பைப் பிடித்து இழுப்பான். முதுமையை அனைவரும் அடைவதைப் போன்று பெண்களும் அடைவார்கள். இரத்த ஓட்டம் சோர்ந்து போய்விடும். பெண்கள் தங்கள் உடல் அழகை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வாழ முடியாது. 40 வயதைக் கடந்து விட்டால் அவள் தன்னுடைய அழகை இழக்கத் தொடங்கி விடுவாள். அந்த நேரத்தில் இதனால் ஏற்பட்ட விளைவுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் பாரதூரமான கஷ்டப்படுகிற சூழ்நிலை ஏற்படும்.

இதில் ஏற்படுகிற இன்னொரு விளைவு, இன்றைய நவீன காலத்தில் பரவலாகப் பேசுகின்ற எய்ட்ஸ் என்னும் ஒரு நோயாகும். ஹெச்.ஐ.வி என்ற வைரஸ் ஒருவரைத் தாக்கினால், இரண்டு அல்லது மூன்று அல்லது பத்து வருடத்தில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கிவிடும். அதாவது இந்த வைரஸ் ஒருவரது உடலில் புகுந்துவிட்டால் அவரது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.

அல்லாஹ் மனிதனின் உடலிலேயே எல்லா நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியையும் வைத்திருக்கிறான். ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்து சாப்பிடாமல் இருந்தாலும் குணமாகி விடுகிறதெனில், அதற்குக் காரணம் நமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி தான். ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்கள். மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு வாரம் என்று பழமொழி கூடச் சொல்வார்கள். ஜலதோஷமும் ஒரு வைரஸினால் தான் வருகிறது. அதை எதிர்த்து நமது உடல் போராடுகிறது. ஜலதோஷத்தை உண்டாக்கும் கிருமியை நமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி போராடி ஒரு வாரத்தில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

காய்ச்சலுக்கும் அப்படித் தான். காய்ச்சலினால் ஏற்பட்ட வலியைக் குறைப்பதற்குத் தான் மருந்து சாப்பிடுகிறோமே தவிர காய்ச்சலை முழுவதுமாகக் குணப்படுத்துவது நம் உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் என்று சொல்லப்படும் நோய் எதிர்ப்பு சக்திதான். அதனால் தான் எந்த நோய் வந்தாலும் அது நீங்கிய பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுகிறோம். இது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த ஒரு அருட்கொடை.

அதேபோன்று பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களுக்குத் தடுப்பூசி போடுவார்கள். நலமாக இருக்கிற குழந்தைக்கு எதற்கு மருந்து என்று கேட்டால், மஞ்சள் காமாலை வருகிற வைரஸைத் தான் தடுப்பூசி என்ற பெயரில் போடுவார்கள். ஆனால் உண்மையில் அந்த ஊசியில் மஞ்சள் காமாலையை வரவைக்கிற வைரஸ் தான் இருக்கும். அப்படியெனில் இதில் என்ன மருத்துவ முறை இருக்கிறது என்றால், குழந்தையின் இரத்தத்தில் தேவையான நோய் எதிப்பு சக்தி இருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள் நல்ல நிலையில் இருக்கும். இந்த மஞ்சள் காமாலையை எதிர்த்து போராடி, ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். மீண்டும் நமது வாழ்நாளில் அதுபோன்று வந்தால், குழந்தையாக இருக்கிற போது நம் உடல் எப்படி போராடியதோ அதேபோன்ற முறையில் போராடி மஞ்சள் காமாலையை வென்றுவிடும். இதுவெல்லாம் இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடை தான்.

ஆனால் இந்த ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ், மனித உடலில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடுகிறது. அப்படியெனில் ஜலதோஷம் பிடித்தால் அது போகாது. ஏனெனில் அதை எதிர்க்கிற சக்தியை ஹெச்.ஐ.வி அழித்துவிடும். இப்படி என்னென்ன நோய்கள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று போராடுகிற சக்தியை இந்த எய்ட்ஸ் கிருமிகள் அழித்துவிடும். முடிவு மரணம் தான்.

ஒரு நோய் காலம் முழுவதும் இருந்தால் மனிதன் வாழமுடியுமா? தலைவலியே காலம் முழுவதும் இருந்தால் இறந்துவிடுவோம். எனவே ஒரு நோய் என்றால் வரவேண்டும்; போக வேண்டும். ஆனால் நீங்காமல் போகாமல் இருந்தால் மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாத பல்வேறு மாற்று விளைவுகளை உண்டாக்கிவிடும். அப்படியெல்லாம் வராமல் இருக்க வேண்டுமெனில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும். ஆனால் ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ் மனித உடலில் புகுந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கி எய்ட்ஸை உருவாக்கிவிடும் என்று கூறுகின்றன இதுவரை நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகள்.

எனவே இந்த எய்ட்ஸ் எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால், இரண்டு காரணங்களால் தான். எய்ட்ஸ் பல காரணங்களால் தொற்றும். ஆனால் ஏற்படுவது இரண்டு காரணங்களால் தான். தொற்றுவது வேறுஉருவாவது என்பது வேறு. தகாத பாலியல் உறவு கொள்கிற பெண்கள் பல ஆண்களிடம் செல்வதால் ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் இருக்கின்ற திரவங்களிலிருந்து வெளியாகிற நச்சுக் கிருமிகள் பல ஆண்களின் உயிரணுக்களுடன் கலந்துவிடுகிற போது, இந்தக் கேடுகெட்ட வைரஸ் கிருமிகள் உருவாகிறது. விரைவாக பெண்களுக்குத் தான் தொற்றுகிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே எய்ட்ஸ் வந்த ஒரு பெண்ணுடன் இன்னொரு ஆண் உடலுறவு கொள்ளும் போது அவனுக்கும் நோய் தொற்றுகிறது.

ஆனால் இங்குள்ள மருத்துவர்களும் அரசாங்கமும் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒரு விளம்பரம் செய்கிறது. இந்த விளம்பரம் முற்றிலும் தவறானது. ஒருத்திக்கு ஒருவன் என்றுதான் விளம்பரம் செய்யவேண்டும். அரபு நாட்டில் ஒன்றுக்குப் பதிலாக நான்கு மனைவிமார்கள் வைத்திருக்கிறார்கள். எந்த எய்ட்ஸும் அவர்களுக்கு வரவில்லை. எனவே ஒருவன் நான்கு மனைவியை வைத்திருந்தால் எய்ட்ஸ் வராது. ஆனால் ஒருத்திக்கு நான்கு புருஷன் இருந்தால் எய்ட்ஸ் வந்துவிடும்.

பெண்கள் ஒரு பாத்திரத்தைப் போன்று இருப்பதினால், அந்தப் பெண்களிடம் பல ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது தான் இந்த கெட்ட வைரஸ் கிருமிகள் உருவாகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக, கட்டுப்பாடற்ற உடலுறவு எனும் சுதந்திரத்தைக் கொடுத்தால் எய்ட்ஸ் என்கிற கிருமி உருவாகி, அது பிறருக்கும் பரவி விடுகிறது என்பதைப் புரியவேண்டும்.

மேலை நாடுகளில் ஆணுறை போன்ற பாதுகாப்பான உடலுறவு முறையைக் கடைப்பிடித்து எய்ட்ஸைக் குறைத்துக் கொள்கிறார்கள். உலகத்திலேயே எய்ட்ஸுக்கு முதலிடம் ஆப்பரிக்கா தான். அதன் பிறகு இந்தியா. இந்தியாவிலுள்ள மாநிலங்களில் எய்ட்ஸ் அதிகமுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு தான். இதற்குக் காரணம் உடலுறவில் கட்டுப்பாடற்ற முறை தான். இந்த தவறான பாலியல் உறவு முறையின் மூலம் எய்ட்ஸ் உருவாகி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவிக் கொண்டே இருக்கிறது.

எனவே இப்படி எய்ட்ஸ் நமக்கும் வந்துவிடக் கூடாது என்றால், நாம் இதைத் தடுப்பதற்குச் சட்டம் போடவேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தத் தீமையை ஒழிக்கப் பாடுபட வேண்டும். எய்ட்ஸ் நோயாளியிடமிருந்து சின்னச் சின்ன காரணங்களால் கூட நமக்கும் பரவும். அதற்காக எய்ட்ஸ் நோயாளியைத் தொடுவதாலோ அல்லது பார்ப்பதாலோ அல்லது அவனுடன் பழகுவதாலோ அல்லது அவனுடன் ஒரே தட்டில் சாப்பிடுவதாலோ நமக்கு வராது. அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயாளிக்கு பயன்படுத்திய அதே ஊசியை நமக்கும் பயன்படுத்தினால் அவரது உடலிலுள்ள நச்சுக் கிருமி நமது உடலுக்கும் வந்துவிடும். நமக்கு வேண்டுமானால் தவறான பாலியல் உறவு மூலம் வராமல் இருக்கலாம். எனவே எப்படியிருப்பினும் முதன் முதலில் எய்ட்ஸ் கிருமிகள் உருவாகுவதற்குக் காரணம், பல ஆண்களிடம் கட்டுப்பாடில்லாமல் உறவு வைக்கிற பெண்களின் மூலமாகத் தான் வருகிறது. பிறகு அவளிடம் உடலுறவு கொள்கின்ற அனைத்து ஆண்களுக்கும் பரவுகிறது.

எனவே கட்டுப்பாடற்ற உடலுறவு முறை எய்ட்ஸை உருவாக்குவதுடன், குடும்ப அமைப்பையும் சீரழித்துவிடும்; வாரிசு முறையை இல்லாமல் செய்துவிடும்.

அதிலும் அரசாங்கம், கணவன் மனைவியாக இருந்து இல்லறத்தில் ஈடுபடுங்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு, பாதுகாப்பான ஆணுறை அணிந்து தவறான பாலியல் உறவான விபச்சாரம் செய்யுங்கள் என்று சொல்வது கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது. இப்படி உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் பாதுகாப்பான முறையில், கணவன் மனைவி என்கிற எந்தக் கட்டுப்பாடும் குடும்ப அமைப்பும் இல்லாமல் உடலுறவு மட்டும் கொண்டால் இந்த மனிதச் சமூகம் தழைக்குமா? சந்ததிகள் உருவாகுமா? எப்படி எல்லோரும் சன்னியாசியாகவும் சாமியாராகவும் துறவறம் சென்றால் மனித சந்ததிகள் உருவாகாதோ, அதேபோன்று தான் இந்தக் கட்டுப்பாடற்ற உறவு முறையின் மூலமும் மனித சந்ததி நின்றுவிடும். நாம்தான் இவ்வுலகில் கடைசி சந்ததிகளாக இருப்போம். இப்படி இவர்கள் சொன்ன இந்த முடிவை, இவர்களது தாய் தந்தையர்கள் எடுத்திருந்தால் இவர்கள் பிறந்திருப்பார்களா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

வளரும் இன்ஷா அல்லாஹ். 

துறவறம் ஓர் போலி வேடம் - குடும்பவியல் தொடர் 2


இஸ்லாம் கூறும் குடும்பவியல்
துறவறம் ஓர் போலி வேடம் (தொடர் - 2)



நபித்தோழர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர்.

இதனால் பெண்கள் கிடைக்காமலிருந்த நிலையில் நபித்தோழர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, எங்களால் எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று கூறி, நிரந்தர ஆண்மை நீக்கம் செய்வதற்கு அனுமதி கேட்கிறார்கள். இது துறவறத்தை விடவும் மேலான நிலை. துறவறம் என்பது ஆசையை வைத்துக் கொண்டே கட்டுப்படுத்துவதாகச் சொல்வது. இது ஆசையே வராத அளவுக்கு ஆண்மையை நீக்குவதாகும்.

மிருகங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதைப் போன்று, மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு முறையில் ஆண்மை நீக்கம் செய்வார்கள். அதனால் தான் நபித்தோழர்கள் அதை நபியவர்களிடம் கேட்கிறார்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா?'' என்று கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். 
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 5071, 4615, 5076

எனவே ஆண்மை நீக்கம் செய்வதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறதெனில், எப்படியாவது ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தாக வேண்டும் என்பதைத் தான் இது வலியுறுத்துகிறது.

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியüத்திருந்தால் 
(ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். 
அறிவிப்பவர்: சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: புகாரி 5073

எனவே ஒரு முஸ்லிம் எந்த நிலையை அடைந்தாலும் கல்யாணம் வேண்டாம் என்கிற முடிவுக்கு ஒருக்காலும் வரவே கூடாது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் வரை தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும். நோன்பைத் தவிர்த்து, துறவறம், ஆண்மை நீக்கம் என்று வேறு எந்த வழிகளையும் தேடக்கூடாது.

மேலும் துறவறம் என்பது தவறானது என்பதைப் பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்தாலே புரிந்து கொள்ளலாம். துறவறம் என்றால் கடவுளுக்காக நமது ஆசைகள் அனைத்தையும் துறந்துவிட்டு, கடவுளை நெருங்குவது என்று சொல்லுகிறார்கள். ஆனால் இப்படிச் சொல்பவர்களின் துறவு போலித்தனமாகவும் இரட்டை வேடமாகவும் இருக்கிறது. சிலர் மனைவி, மக்களைத் துறக்கிறார்கள். இன்னும் சிலர் ஆடையைக் கூட துறந்து தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எந்தத் துறவியும் இதுவரை சாப்பாட்டைத் துறக்கவே இல்லை. சாப்பிடுவதும் மனிதனின் ஆசையில் உள்ளது தானே.

இன்னும் சொல்லப் போனால், மனைவி, மக்கள், ஆடை எதுவும் தேவையில்லை என்று சொல்லி துறவறக் கோலம் பூணுபவர்கள், தங்களது முழு ஆசையையும் சாப்பாட்டின் மீது வைத்து திருவோட்டைத் தூக்கிக் கொண்டு போகின்ற காட்சியைப் பார்க்கிறோம். ஆனால், சாப்பாடும் தேவை, எல்லாம் தேவை என்று மக்களோடு மக்களாக இருந்து, துறவறம் கூடாது என்று சொல்லும் நாம், சாப்பாட்டிற்காக எந்தத் திருவோட்டையும் எடுத்துக் கொண்டு பிச்சை எடுக்கவில்லை. எனவே ஆசையைத் துறப்பது என்பது போலித் தனமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஒரு மனிதன் ஆசையைத் துறக்க முடியுமா என்றால், முடியவே முடியாது. ஆசையைத் துறப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள், இரண்டு விதமாக இருப்பார்கள். ஒரு சாரார், பெண்களோடு தனிமையில் இருக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்பு கிடைத்தால் உடனே கெட்டுவிடுவதையும் உலகத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். துறவறம் என்று திரிந்தவர்களில் 99 சதவீதம் பேர் நாறிப் போன கதைகளை நமது நாட்டில் பார்த்தோம். உச்ச நிலையில் வைத்து மக்களால் மதிக்கப்பட்டவர்களெல்லாம் கூட, பெண்களுடன் தனிமையில் இருக்கிற சந்தர்ப்ப சூழ்நிலையில் தனது துறவறத்தைத் துறந்து, தான் ஒரு பொய்யன் என்பதை உலகிற்குக் காட்டிவிடுகிறார்கள்.

எனவே பசித்தால் எப்படி சாப்பிடாமல் இருக்கமுடியாதோ அதே போன்றது தான் இந்த இல்லற சுகம். பெண்களின் மூலம் ஆண்களும் ஆண்களின் மூலம் பெண்களும் சுகம் அனுபவித்தல் என்பதும் ஒரு வகையான பசி. இந்தப் பசிக்குத் திருமணம் என்ற முறையான தீனி கொடுக்காவிட்டால், திருடித் திண்ணும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுவிடுவான். ஹலாலான சாப்பாடு கிடைக்காத போது ஹராமைத் தேடிச் செல்வது இயற்கையான ஒன்றுதான். இல்லறப் பசிக்கு ஹலாலான வடிகால் அமைக்கவில்லையெனில், ஹராமான முறையில் பெண் சுகத்தை மனிதன் தேடி, தன்னையும் சமூகத்தையும் அழிக்கத் துணிகிறான். எனவே பலர் இதை விளங்காமல், நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரு சித்தாந்தத்தை உலகில் சொல்லி சமூகத்தைக் கெடுக்கப் பார்க்கிறார்கள். ஆனாலும் இந்தச் சித்தாந்தம் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. 

இருப்பினும் முஸ்லிமல்லாத மக்களிடம் துறவறம் சிறந்தது என்ற ஒரு நம்பிக்கை இருக்கத் தான் செய்கின்றது. "நாம் தான் அப்படி இருக்க முடியவில்லை; சிலரால் இப்படித் துறவியாக இருக்க முடிகிறது. இது சிறந்த பண்பு தான்' என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால் அது தவறான நம்பிக்கையாகும். ஏனெனில் எல்லாவற்றையும் துறந்த துறவி செய்கிற நன்மையை விட, துறவறம் கூடாது என்று குடும்பத்துடன் வாழ்கிறவர்கள் தாம் அதிகமான நன்மைகளைச் செய்கிறார்கள். துறவிகள் மனைவி, மக்கள், சொந்த பந்தம், உற்றார், உறவினர் என்று குடும்ப அமைப்பையும் துறக்கிறார்கள். தன்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்கிற நன்மையை இழந்து விடுகிறார்கள். எனவே தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் அவர்களுக்குத் துரோகம் செய்த கேடுகெட்ட பிறவிகளாகவே இவர்களை நாம் பார்க்கிறோம்.

அதேபோன்று பிள்ளைகளைக் கொஞ்சுகிற பாக்கியமும், அவர்களின் ஒவ்வொரு நிலைகளையும் கவனித்துக் கவனித்து வளர்க்கிற பாக்கியத்தையும், அப்படி வளர்ப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சியையும் இன்பங்களையும் இந்தத் துறவிகள் இழக்கிறார்கள். அதற்குரிய நன்மைகளும் கிடைக்காது.

ஒருவரைச் சந்திக்கும் போது முகமன் கூறுவது, நலம் விசாரித்துக் கொள்வது, கஷ்டப்படுபவருக்கு உதவுவது, போராட்டத்தில் ஈடுபடுவது, சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த நன்மைகளைச் செய்வது என்று எதற்கும் வரமாட்டார்கள் இந்தத் துறவிகள்.

சாதாரண மக்களிடம் இருக்கிற நிறைய நன்மையான காரியங்கள் துறவிகளிடம் இருக்காது. இவர்கள் தான் உலகத்தில் முதல் தர சுயநலவாதிகள். எனவே எதிலும் கலந்து கொள்ளாத, நன்மை தீமைகளைக் கண்டு கொள்ளாமல் விலகிக் கொள்பவர்கள் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படவே கூடாது. இவர்கள் மிகவும் மட்டமான மனிதர்கள் என்பதை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் சமூகத்தில் மிகவும் கீழ்த்தரமானவர்கள்.

எனவே துறவறம் என்ற இந்தச் சித்தாந்தம் குடும்ப அமைப்பை அழித்து நாசமாக்கிவிடும். குடும்ப உறவு என்பதே கணவன், மனைவி என்ற இருவரின் மூலமாகத் தான் உருவாகிறது. அண்ணன் தம்பி, அக்காள் தங்கை, மாமன் மைத்துனர், தாத்தா பாட்டி என்ற குடும்ப உறவுகளே இல்லாமல் ஆக்கி விடும் கேடுகெட்ட சிந்தாந்தம் தான் இந்தத் துறவறம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்.... 

இஸ்லாம் கூறும் குடும்பவியல் (தொடர் - 01)

இஸ்லாம் கூறும் குடும்பவியல்
MOHAMMED THAHA M.I.Sc 



(மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய ரமளான் மாத தொடர் சொற்பொழிவுகளில் ஒன்றான "இஸ்லாம் கூறும் குடும்பவியல்' என்ற உரையை எழுத்து வடிவில் அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். குடும்பவியலின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியிருந்த இந்த சொற்பொழிவை, ஏகத்துவம் இதழில் தொடராக வெளியிட எண்ணியுள்ளோம், இன்ஷா அல்லாஹ். வாசகர்கள் படித்துப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்). 

இஸ்லாமிய மார்க்கம் எந்தப் பிரச்சனையில் தலையிட்டாலும் அதில் முழுமையாகவும் தெளிவாகவும் அறிவுக்குப் பொருத்தமாகவும் நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் அணுகக் கூடிய ஒரு மார்க்கம். அந்த அடிப்படையில் குடும்பவியலைப் பற்றி இஸ்லாம் எத்தகைய நெறிமுறைகளை நமக்குச் சொல்லித் தருகிறது என்பதை இந்தத் தொடரில் பார்க்கவிருக்கிறோம்.

இதற்குக் காரணம் கடந்த காலங்களிலிருந்து தற்போதைய நிலையைக் கவனிக்கும் போது குடும்ப அமைப்பு நம்மிடம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. இப்படியெல்லாம் குடும்பங்கள் சீரழிவை நோக்கிச் செல்லக் காரணம், முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் சட்டங்களைத் தெரியாமல் இருப்பது தான், அல்லது அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படாமலேயே இருப்பது தான்.

எனவே இந்தத் தலைப்பிலுள்ள செய்திகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றுகூடச் சொல்லலாம்.

குடும்பவியல் என்றால் என்ன?

முதலாவதாக, அல்லாஹ் எந்தெந்த படைப்புகளை, உயிரினங்களையெல்லாம் நேரடியாகப் படைத்திருக்கிறானோ அவற்றை இனப்பெருக்கம் செய்கிற வகையில் படைத்திருக்கிறான். அல்லாஹ் படைத்தவை மட்டும்தான் ஒன்றிலிருந்து இன்னொன்று உற்பத்தியாகின்ற வகையில் இருக்கும்.

மனிதர்கள் எதையாவது உற்பத்தி செய்தால், அது இன்னொன்றை உற்பத்தி செய்யாது. ஒரு மனிதன் பேனாவையோ அல்லது மைக்கையோ உற்பத்தி செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்த மைக்கோ பேனாவோ குட்டி போடாது. இனப்பெருக்கம் செய்யாது. முதலில் ஒரு பேனாவை எப்படித் தயாரித்தார்களோ அதே போன்று மற்ற பேனாக்களையும் தயாரிக்க வேண்டும். இது மனிதனின் படைப்பு.

ஆனால் ஒரே இறைவனாகிய அல்லாஹ், முதலில் ஆதம் (அலை) என்கிற முதல் மனிதனைப் படைக்கிறான். அவரது விலா எலும்பிலிருந்து அவருக்குரிய துணையான ஹவ்வா (அலை) அவர்களைப் படைக்கிறான். இந்த இருவரிலிருந்து இனப்பெருக்கத்தைத் தொடங்கி இன்று கோடான கோடி மனிதர்களாக உருவாகியிருக்கிறோம்.

ஆனால் நேரடியாக இறைவன் படைத்தது, முதலில் படைத்த ஆதாம், ஹவ்வா என்கிற ஒரு ஜோடியை மட்டும் தான். மற்றவையெல்லாம் அவ்விருவரிலிருந்தும் பல்கிப் பெருகியவர்கள் தான். இதே போன்று மனிதனல்லாத மற்ற படைப்புகளான ஆடு, மாடு, கோழி போன்ற எண்ணற்ற ஜீவராசிகளில் ஒவ்வொரு ஜோடியைத் தான் அல்லாஹ் படைத்தான். அதுதான் பல்கிப் பெருகி இன்று பல உயிரினங்களாக வளர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

அதேபோன்று தாவரங்களை எடுத்துக் கொண்டாலும் ஒரேயொரு விதையிலிருந்து ஏராளமான மரங்களையும் செடி, கொடிகளையும் அல்லாஹ் உருவாக்கியிருக்கின்ற அதிசயத்தைப் பார்க்கிறோம். இப்படி ஒவ்வொரு உயிரினமும் பல்கிப் பெருக வேண்டும் என்பதற்காக அவற்றிற்கு மத்தியில் ஆண், பெண் என்ற இரண்டு இனத்தை உருவாக்கி, ஒன்றையொன்று கவரக்கூடிய வகையில் அவற்றில் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் அல்லாஹ் உயிரினங்களைப் பெருகச் செய்கிறான்.

தாவரங்கள் உட்பட ஒவ்வொரு உயிரினத்திலும் அவைகளில் தானாகக் கவரக்கூடிய வகையில் இல்லாவிட்டாலும், அவைகளிலும் கூட ஆண், பெண் என்ற இரண்டு இனங்களைப் பார்க்க முடிகிறது. பூக்களில் ஆண் பூ என்றும் பெண் பூ என்றும் இருக்கிறது. ஆண் பூவும் பெண் பூவும் ஒன்றோடு ஒன்று இணைந்தால் மட்டும் தான் பூக்கள் காய்க்க முடியும். இதே போன்று தான் எல்லா வகையான உயிரினங்களையும் அல்லாஹ் படைத்திருக்கிறான்.

மனித இனத்திற்கு மட்டுமே குடும்ப அமைப்பு

இப்படி எல்லாமே ஆண், பெண் என்கிற இனக்கவர்ச்சியின் மூலம் பெருக்கக் கூடியதாக இருந்தாலும், மனிதனுக்கு மட்டுமே குடும்பம் என்கிற அமைப்பு இருக்கிறது. ஆடு, மாடு, கோழி போன்றவைகளில் ஆணும் பெண்ணும் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் அவற்றுக்கு மத்தியில் குடும்பம் என்கிற ஒரு நிர்வாக அமைப்பு கிடையாது. அவை இனப்பெருக்கத்திற்காகச் சேர்வதோடு தங்களது வேலையை முடித்துக் கொள்ளும். அதற்குப் பிறகு ஏற்படுகிற சுமைகளை அவை ஏற்பது கிடையாது. இவற்றில் பெண் இனம் தான் எல்லா விளைவுகளையும் சுமந்தாக வேண்டும்.

உதாரணமாக, ஒரு ஆண் ஆடும் ஒரு பெண் ஆடும் இணைந்து சேர்க்கையில் ஈடுபட்டு, பெண் ஆடு சினையாகி விட்டதெனில், அதற்குரிய எல்லா கஷ்ட நஷ்டங்களையும் பெண் ஆடு மட்டும் தான் சுமக்கும். ஆணுக்கு எந்தவிதமான பொறுப்பும் கிடையாது. இனச் சேர்க்கையில் ஈடுபட்டதோடு தனது வேலையை ஆண் ஆடு முடித்துக் கொள்ளும், தன்னால் தானே இந்தப் பெண் ஆட்டிற்குச் சினை ஏற்பட்டது; அதற்கு ஏற்படுகிற கஷ்டத்தில் நாமும் பங்கு எடுத்துக் கொள்வோம் என்று சிந்திக்க, செயலாற்றுகின்ற எந்தப் பகுத்தறிவும் விலங்குகளுக்குக் கிடையாது. இதே போன்று தான் கோழியின் சிரமத்தில் சேவல் பங்கெடுக்காது, பசு மாட்டின் கஷ்டத்தில் காளை மாடு பங்கெடுக்காது.

ஆனால் மனிதன் பகுத்தறிவுள்ளவனாக இருப்பதால், ஆணும் பெண்ணும் இனச் சேர்க்கையில் ஈடுபட்டதினால், பெண் வயிற்றில் சுமக்கிற குழந்தைக்கு நாம் தான் காரணம் என்பதை ஒவ்வொரு ஆணும் ஏற்றுக் கொள்கிறான். நாமே இதற்குப் பொறுப்பாளியாக இருக்கிறோம். எனவே நாமும் பெண்ணின் சிரமத்தில் கவனத்துடன் பொறுப்பெடுத்தாக வேண்டும் என்ற ஒரு சிந்தனை பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தான் இருக்கிறது. இப்படி நல்ல எண்ணத்தில் தான் குடும்பம் என்கிற ஒரு அமைப்பை மனிதன் உண்டாக்குகின்றான்.

குடும்பம் என்கிற அமைப்பு இல்லாமல், நீ எனக்கு மனைவி, நான் உனக்குக் கணவன் என்கிற கட்டுக் கோப்பு இல்லாமல், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற நிலைக்குள் போய்விட்டால், பெண்களின் சிரமங்களை பெண்கள் மட்டுமே சுமக்கிற அவல நிலை ஏற்பட்டுவிடும். ஆண்கள் அதில் எந்தவிதப் பங்கையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக, குடும்பம் என்ற அமைப்பு கெட்டுவிட்டால் பெண்கள் பாரதூரமான துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இப்படியான அவல நிலையைத் தவிர்ப்பதற்குத் தான் ஆதிகாலத்திலிருந்தே, ஆதம் நபி காலத்திலிருந்தே அல்லாஹ் குடும்ப அமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறான்.

ஆதமைப் படைத்து, அல்லாஹ்வே அவருக்கு ஒரு ஜோடியையும் கொடுத்து, நல்லது கெட்டதையெல்லாம் சுமக்க வேண்டும் என்றாக்கி, ஆணாக இருக்கிற நீ தான் உனது மனைவியைப் பராமரிக்க வேண்டும் என்றாக்கி, முதல் மனிதனாகிய ஆதம் முதலே குடும்ப அமைப்பை உருவாக்கினான். அப்படி ஆதம் நபி மூலம் உருவாக்கிய அந்த அமைப்பு தான் இன்று உலகம் முழுவதும் குடும்ப அமைப்பாக இருந்து கொண்டிருக்கிறது.

குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் காரணங்கள்

சமீப காலமாகப் பார்த்தால், இந்தக் குடும்ப அமைப்பைச் சீரழித்துப் பாழாக்கக் கூடிய பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகின்றன.

குடும்பம் என்கிற எந்த அமைப்பும் நிர்வாகமும் தேவையில்லை என்றும், அப்படி ஏன் இருக்க வேண்டும்; அப்படித்தான் இருந்தாக வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றும், ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் சந்தோசமாக இருக்கலாம்; அதே போன்ற உரிமைகள் பெண்களுக்கும் இருப்பதால் ஒரு பெண்ணும் தான் விரும்பியவாறெல்லாம் வாழ்ந்து கொள்ளலாம் என்றும், குடும்பம் என்ற எந்தக் கட்டுக்கோப்பும் நமக்குத் தேவையில்லை என்றும் அறிவு ஜீவிகள் என்று பிதற்றிக் கொள்கின்றவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அதை மிகப் பெரிய நாகரீக வளர்ச்சியாகக் காட்டி ஊடகங்கள் தவறான பிரச்சாரம் செய்வதையும் பார்க்க முடிகிறது.

குடும்பத்தைச் சீரழிக்கும் காரணங்கள் என்னவென்று நாம் ஆய்வு செய்தால் அவற்றில் மிக முக்கியமான மூன்று காரணங்களைச் சொல்லாம். மனிதனை வழிகெடுப்பதற்காக ஷைத்தான் இந்த மூன்று செயல் திட்டங்களையும் பயன்படுத்துகிறான். அந்த மூன்று தவறான செயல் திட்டங்களில் முதலாவது துறவறமாகும்.

துறவறம்

ஓர் ஆணுக்கு ஒரு பெண் தேவை கிடையாது. அதே போன்று ஒரு பெண்ணுக்கு ஆண் தேவை கிடையாது. இல்லறம் என்ற சேர்க்கை உறவும் தேவையில்லை. நமது ஆசாபாசங்களையெல்லாம் துறந்துவிட்டு கடவுளுக்காகவே வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்படுவதே துறவறமாகும்.

கடவுளுக்காக தவம் இருக்க வேண்டும்; தியானத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் கடவுளுக்காகத் தன்னையே அர்ப்பணிப்பதை புனிதமாகக் கருதுவது பல மதங்களில் மிக முக்கிய கோட்பாடாக இருப்பதைக் காணமுடிகிறது. இப்படித் துறவிகளாக இருப்பவர்கள் தான் அந்த மதத்தின் பீடாதிபதிகளாகவும் ஞானிகளாகவும் பெரிய அறிவாளிகளாகவும் கருதப்படுகிறார்கள். குடும்பத்தில் ஈடுபட்டு, பிள்ளை குட்டிகளைப் பெற்று, சமூகத்தோடு வாழ்கிற நம்மையெல்லாம் விடச் சிறந்த மக்களாக துறவிகள் எல்லா மதங்களிலும் கருதப்படுகிறார்கள்.

இந்தச் சிந்தனை எல்லோருக்கும் வந்தால் மனிதகுலம் முடிந்துவிடும். ஏதோ இலட்சத்தில் ஒருவன் இந்தத் துறவறம் என்ற சிந்தனையில் இருப்பதால் உலகம் இயங்குகிறது. துறவறம் எனும் இந்த வியாதி பரவி, உலகத்திலுள்ள அனைவரும் துறவறத்தை முடிவாக எடுத்தால், அத்தோடு உலகம் முடிந்து விடும். பிள்ளைகள் பிறக்காது. கியாமத் நாள் என்ற உலக முடிவு நாள் வருவதற்கு முன்பாகவே மனித சமூகம் அழிந்துவிடும்.

எனவே குடும்ப வாழ்க்கை தேவையில்லை, துறவறமே கதி என்று வாழ்வது ஷைத்தானின் மாய வலையாகும்.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான் இந்தத் துறவறத்திற்குச் சாட்டையடி கொடுத்து விரட்டியடிக்கிறது. துறவை மாபெரும் குற்றமாகக் கருதி வன்மையாகக் கண்டிக்கின்றது. இருப்பினும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள முஸ்லிம்களும் துறவறம் என்ற தாக்குதலுக்குள் சிக்கப்பட்டிருந்தனர் என்பது தான் உண்மை. இறைவனுக்காகத் தன்னை அர்ப்பணிப்பது புனிதமாக முஸ்லிம்களிடத்திலும் பரவி இருந்தது.

தற்போது ஏகத்துவ சிந்தனை எழுச்சி தமிழகத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட பிறகு அது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தும் இருப்பதால், துறவறம் இஸ்லாத்தில் கூடாது, அது குற்றம் என்று மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டனர்.

எந்தளவுக்குத் துறவறத்தை முஸ்லிம்கள் கடந்த காலத்தில் ஆதரித்தார்கள் எனில், துறவறத்தைக் கடைப்பிடிப்பவர் அவ்லியாக்களாகவும் மகான்களாகவும் பார்க்கப்பட்டார்கள். மகான் என்பதற்கு அடையாளமே துறவறம் என்று சொல்கின்ற அளவுக்குத் தவறான வழியில் இருந்தார்கள்.

மேலும், திருமண வாழ்க்கையையும், பிள்ளை குட்டிகள் பெற்றுக் கொள்வதையும், சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதையும் கொச்சைப்படுத்தி பிரச்சாரமும் செய்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு உதாரணமாக, குணங்குடி மஸ்தான் என்ற ஒரு அவ்லியாவைச் (?) சொல்லலாம். இவர் முஸ்லிம்களால் மதிக்கப்படுகிற மகான். இவரது பெயரில் சென்னை தண்டையார் பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் தர்ஹா இருக்கிறது. இவர் தனது பாட்டில் பெண்களைக் கொச்சைப்படுத்தி ஏசியுள்ளார். 

சங்கையும் போக்கி சதி மானமாக
சகசென்டியாக்கி வித்திடுவாள்
வெகு பங்கப்படுத்திட்டுவாள்
அந்த மங்கையர் ஆசை வைத்தைய்யய்யோ வையத்தில்
பெண்கொண்ட பெயர்பட்ட பாட்டையும் கேட்டையும் பேசுவோமே நெஞ்சமே!

"இந்தப் பெண்கள் ஆண்களுக்கு இருக்கிற மரியாதையை எல்லாம் போக்கி விடுவார்கள்; வெட்கங்கெட்ட செயல்களை நம்மைச் செய்ய வைத்துவிடுவார்கள்; நம்மைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இப்படிப் பெண்கள் மீது ஆசை வைத்து, கேடுகெட்டு விட்ட உன் பாட்டையும் கேட்டையும் பேசுவோமா?'' என்று கேட்கிறார்.

இதன் மூலம் பெண்கள் ஆண்களின் மரியாதையைக் கெடுத்துவிடுவார்கள் என்றும், கேவலப்படுத்துவார்கள் என்றும் இஸ்லாத்தின் போர்வையில் கவிதை எழுதுகிறார். இந்தக் கவிதைகள் ஒரு காலத்தில் மஸ்தானுடைய பாடல்கள் என்று பள்ளிவாயில்களில் பாடப்பட்டுக் கொண்டிருந்தன.

தங்க நகையும் முகப்பணி சேலையும்
தாவெனவே குரங்காட்டுவாள்

பெண் என்பவள் தங்க நகை வேண்டும்; நல்ல அழகழகான சேலைகளும் துணிமனிகளும் வேண்டும் என்று ஆண்களை ஆட்டுவாள் என்று பெண்கள் சமூகத்தை ஊனப்படுத்துகிறார்.

ஆதியைத் தேடி அருள்பெற நாடி
அழுதழுது மடிபிடிப்பாள்; நீதான்
ஏதென்னை விட்டு பிரிவதுமென்றவள்
ஏங்கியேங்கி துடிதுடிப்பாள்

அல்லாஹ்வைத் தேடி நாம் துறவறத்திற்குச் சென்றால், நமது மடியைப் பிடித்து அழுது துறவறத்திற்குத் தடை செய்வாள். அல்லாஹ்விற்காக எங்காவது போகலாம் என்று நினைத்தாள் ஏங்கியேங்கி துடிதுடிப்பாள்.

நாடிக் குருவடி தேடிநடக்கிற
நற்செயலைக் கசப்பாக்குவாள்
குருவடி என்றால் சேக், முரீது என்று பொருள். முரீது வாங்கிக் கொண்டு ஷேக்குடன் செல்லுவதைக் கசப்பாக்குவாள். அவருடன் போகாதே, என்னுடனே இரு என்று கூறுவாள்.

ஓடித்திரிந்தேயலைந்து பணங்கள்
ஓருக்காலே தேடென்று தாக்குவாள்
தேடும் பொருள்தனை காணிலும்
தேசத்தில் யார் என்று தூக்குவாள்

ஓடி ஓடி உழை என்று காசு பணத்தாசை காட்டுவாள், ஓடியாடி உழைத்துக் கொட்டினால் உலகத்தில் உன்னை மாதிரி யாரும் உண்டா? என்று பாராட்டுவாள். இப்படியெல்லாம் பெண்களைக் கேவலப்படுத்துகிறார். பெண்கள் என்றால் நச்சுப் பாம்பு போன்று என்று தவறான சித்தரிப்பை உண்டாக்குகிறார்.

ஆடென்றும் மாடென்றும் வீடென்றும்
தேடென்றும் ஆண்டவனை மறப்பாக்குவாள்

ஆடு, மாடு, வீடு போன்றவை வேண்டும் என்பதற்காக ஆண்டவனையே மறக்கச் செய்திடுவாள் என்று படிக்கிறார்.

இப்படியெல்லாம் இஸ்லாத்தின் பெயரால், குடும்ப வாழ்க்கை வேண்டாம், அவரவர் தன்னை மட்டும் காத்துக் கொண்டால் போதும் என்று கூறும் துறவறம் ஒரு நல்ல சித்தாந்தமாகக் கடந்த காலங்களில் கருதப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இவை சான்றாக இருக்கின்றன.

திருமணமே வேண்டாம் என்று சொல்லி புறக்கணித்தவர்களும் திருமணம் முடிக்காமலேயே வாழ்நாளைப் பாழாக்கியவர்களும் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள்; அவர்கள் ஒருபோதும் இறைநேசர்களாக இருக்கவே முடியாது என்ற உண்மை தெரியாமல், துறவறம் மேற்கொள்ளுபவர்கள் மகான்களாகவும் அவ்லியாக்களாகவும் இருப்பார்கள் என்ற தவறான எண்ணம் முஸ்லிம்களிடமும் இருந்தது என்பதற்கும் இவை சான்றுகளாகும்.

ஆனால் இஸ்லாம் இந்தக் கொள்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும் அவசியம். திருமண வாழ்க்கையை யாராவது ஒருவர் புறக்கணித்தால் அவர் இஸ்லாத்தில் இருக்கவே முடியாது எனும் அளவுக்குத் துறவறத்தை இஸ்லாம் அறவே இல்லாமல் ஒழிக்கிறது.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்கüல் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கüடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள் அறிவிப்பவர்: அனஸ்  பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 5063

எனவே திருமண வாழ்க்கையைப் புறக்கணிப்பவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர் இல்லை என்று நபிகள் நாயகம் பிரகடனப்படுத்துகிறார்கள். அதாவது திருமணத்தை முஸ்லிம் என்பதற்கான அடையாளமாக நபிகள் நாயகம் மனித சமூகத்திற்குக் காட்டித் தருகிறார்கள்.

மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்ததும், ஹிஜ்ரத் செய்து வந்தவர்கள் அளவுக்கு மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர். பத்து ஊரைச் சேர்ந்த ஆண்களுக்கு ஒரு ஊரில் பெண்கள் கிடைக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு 200 பேர் இருக்கின்ற ஊரில் 100 ஆண்கள் நுழைந்தால் ஆண்கள் அனைவருக்கும் பெண்கள் கிடைக்க மாட்டார்கள். அதாவது அந்தந்த ஊரில் இருப்பவர்களுக்கு அந்தந்த ஊரில் பெண் கிடைத்துவிடும்.

இந்நிலையில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்துள்ள எங்களுக்குப் பெண் கிடைக்கவில்லை என்று ஸஹாபாக்கள் நபியவர்களிடம் புகார் தெரிவிக்கிறார்கள். அப்போது நபியவர்கள், திருமணத்திற்குச் சக்தியிருந்தால் திருமணம் முடியுங்கள். அதற்கு வாய்பில்லையென்றால், அவர் நோன்பு வைத்துக் கொள்ளட்டும் என்றார்கள்.

திருமண முடிக்க பொருளாதார வசதி இல்லையென்றாலோ அல்லது பெண் கிடைக்காமல் இருந்தாலோ அவர் நோன்பு வைத்து, தமது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, துறவறம் மேற்கொள்ளக் கூடாது. ஒருவேளை நமக்கு வாய்ப்பு வந்துவிட்டால் நாம் நோன்பு வைப்பதை நிறுத்திக் கொள்ளலாம். நோன்பு வைத்துக் கொண்டால் ஒரு மனிதன் பாதுகாப்புப் பெறுவான்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று பழமொழியெல்லாம் சொல்லுவார்கள். பசி வந்துவிட்டால் இந்த மாதிரியான நாட்டங்கள் வராது. அல்லது தூண்டுதல் குறைவாக இருக்கும். எனவே திருமணத்திற்குச் சக்தியில்லாதவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற சட்டத்தைக் கொண்டு, திருமணம் முடிப்பதன் அவசியத்தை நமக்கு நபிகளார் விளக்குகிறார்கள். இது திருமணத்தை வலியுறுத்திச் சொன்ன செய்தியாகும்.

"இளைஞர்களே! உங்கள் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள்.
(நூல்: புகாரி 5065, 5066)

வளரும் இன்ஷா அல்லாஹ்....
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்