Saturday, December 31, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 30-12-2011



எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 30-12-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது. 

இன்றைய நிகழ்ச்சியில் நமது மண்டல துணைத் தலைவர் சகோ. மொய்தீன் அவர்கள் "அல்லாஹ்வைப் பார்க்க முடியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 30-12-2011



அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் சகோ.சாபிர் அவர்கள், “பாவ மன்னிப்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Monday, December 26, 2011

வாராந்திர பயான் - 23-12-2011


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-12-2011 வெள்ளியன்று நடந்த வாராந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானி அவர்கள் "எது சோதனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் முஸ்லிம்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் சோதனைகளையும் அதில் பொறுமையைய் மேற்கொண்டால் மறுமையில் அல்லாஹ் தரவிருக்கும் பரிசுகளையும் பற்றியும், நல்ல முறையில் வந்திருந்த அனைவருக்கும் புரியும் விதத்தில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வாராந்திர பயான் ஹித் (23-12-2011)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை (23-12-2011) அன்று ஜும்ஆவிற்குப் பிறகு ஹித் கிளையில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. நவாஸ் அவர்கள் "அண்டை வீட்டாரின் கடமைகள்" என்ற தலைப்பில் ஒரு முஸ்லிமிற்கு அண்டைவீட்டாரின் மீது உள்ள கடமைகள் என்ன என்னவென்று சுருக்கமாகவும் தெளிவாகவும் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஹித் கிளையைச்சார்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Monday, December 19, 2011

நவீன உலகில் இஸ்லாம் - ஓர் கலந்தாய்வு

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை பயனுள்ள வழியில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே.


இந்த நிகழ்ச்சியானது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் யோசனைப்படி "நவீன உலகில் இஸ்லாம்" என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி 17-12-2011 அன்று மதியம் 3 மணியளவில் ஆரம்பமானது.


இதில் நமது சகோதரர்கள் இரு தரப்பாக அமர்ந்து இஸ்லாம் ஹராமாக்கிய வட்டி, வரதட்சனை ஆகிய தலைப்புகளிலும், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளை எப்படி இஸ்லாமிய முறைப்படி வளர்ப்பது மற்றும் இன்றைய உலகில் ஆடம்பர வாழ்க்கைகாக மக்கள் எப்படியெல்லாம் இஸ்லாத்திலிருந்து விலகி நடக்கிறார்கள் என்ற 4 தலைப்புகளில் கலந்தாய்வு நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.


இதில் அமர்ந்திருந்த இரு தரப்பு சகோதரர்களும் தத்தமது கருத்துக்களை மிகத் தெளிவாக, நகைச்சுவை கலந்து, எளிய முறையில் பதித்தனர். இந்த நிகழ்ச்சியை அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை மேலும் சிறப்புற செய்தார்கள்.


இரு தரப்பு சகோதரர்களும் அவர்கள் பதிந்த கருத்துக்களின் அடிப்படையில், இஸ்லாம் எப்படியெல்லாம் இந்த நவீன உலகில் அணுக வேண்டும் என்று ஆயிரத்தி நானுறு ஆண்டுகளுக்கு முன்பே ஏக இறைவன் தனது திருமறையிலும், உம்மி நபி (ஸல்) அவர்கள் வழியாலும் சொல்லிய எச்சரிக்கின்ற வாசகங்களை எடுத்துக் காட்டி தமது விளக்கத்தை கூறி முடித்தார்.


இதன் பிறகு கலந்து கொண்ட சகோதர்களின் கருத்து கேட்ட போது, இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியானது மிகவும் சிறந்ததோரு நிகழ்ச்சியாகவும், இந்த காலகட்டத்தில் எப்படியெல்லாம் மக்கள் சாக்கு போக்கு கூறி இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை புறந் தள்ளுகின்றனர் என்று மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டது என்று கூறி சகோதரர் அவர்கள் தமது கருத்தை பதிந்தார்கள்.


இந்த நிகழ்ச்சியை நமது மண்டல நிர்வாகிகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள்.


இந்த நிகழ்ச்சியில் நமது சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

சிறப்பு நிகழ்ச்சி (17-12-2011)


ஏக இறைவனின் கிருபையால், எப்படா விடுமுறை வரும் உடனே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கேட்கும் அளவிற்க்கு, இந்த முறை விடுமுறை தினத்தையும் பயனுள்ள வகையில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இன்றைய (17-12-2011) நிகழ்ச்சி காலை 10 மணியளவில் ஆரம்பமானது. இதில் அமீரக ஒருங்கிணைப்பாளரான சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் ''குருதி உறவா? கொள்கை உறவா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இவர் தனது உரையில், நாம் அன்றாட வாழ்வில் குருதி உறவிற்கே நாம முக்கியத்துவம் அளித்து கொள்கை உறவுக்கோ அல்லது மறுமையின் பயனுக்கோ முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் மேலும் நாம எந்த அளவுக்கு குருதி உறவிற்க்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளான் மற்றும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை எந்த விதத்தில் அமைந்திருந்தது என்பதை பற்றியும் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

இதை தொடர்ந்து "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" முஸ்லீம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளான.

ஆண்கள் தரப்பிலிருந்து:
  1. திருமணத்தில் இடவசதி பற்றாக்குறையால் மண்டபம் பிடித்து திருமணம் நடத்தலாமா?
  2. கஸ்ர் தொழுகை எத்தனை நாட்கள் தொழலாம்?
  3. கஸ்ர் தொழுகை இந்த கால கட்டத்தில் கூடுமா?
  4. அசையா சொத்துகளுக்கு தற்போதைய விலைப்படி ஜகாத் கொடுக்க வேண்டுமா?
  5. திருமணம் பற்றிய TNTJ வின் நிலைபாடு என்ன?
பெண்கள் தரப்பிலிருந்து:
  1. தேன், கொசு போன்ற ஜந்துகளுக்கு ஊறு விளைவிப்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
  2. குளிப்பு கடைமையான பின் குளிக்காமல் உறங்கி மரணித்து விட்டால் என்ன நிலைமை?
  3. இஸ்ரேல் தயாரித்த பொருட்களை நாம் உபயோகிக்கலாமா?
  4. பலவீனமான ஹதீஸ்களை நாம் எப்படி அறிந்து கொள்வது?
இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு சகோதரர் அவர்கள் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கி சபையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

இதனை தொடர்ந்து லுஹர் தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுது, மதிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதர, சகோதரிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Sunday, December 18, 2011

தர்பியா முகாம் - 2

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை பயனுள்ள வழியில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே.

அவர்கள் தலைமையில் இரண்டாம் கட்ட தர்பியா நிகழ்ச்சி 17-12-2011 அன்று அதிகாலை 7 மணியளவில் நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்டது.

இந்த தர்பியா முகாமில் இஸ்லாமிய இயக்கங்களைப் பற்றி சகோதரர் அவர்கள் விளக்கினார்கள். அதில்,

  1. காதிமியா என்பவர்கள் யார்?
  2. துருக்கியில் எப்படி பட்ட கொள்கை பின்பற்றப் பட்டு வருகின்றது?
  3. ஷியாக் கொள்கை எப்படி உருவெடுத்தது?
  4. இந்தியாவில் உட்கொண்ட கொள்கைகள் யாவை?

என்பன போன்ற வரலாறு சான்ற நிகழ்ச்சிகளை சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும் எடுத்துக் கூறி விளக்கினார்கள்.

இதில் நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

தர்பியா முகாம் - 1


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் 17-12-2011 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு, சகோ. ஹாமீன் இப்ராஹிம் தலைமையில் அரங்கேறியது.

இதில் ஆரம்ப கட்டமாக, நிர்வாகத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது? அதில் நாம் எப்படியெல்லாம் செயல் பட வேண்டும் என்பதை பற்றி மிகத் தெளிவாக விளக்கி கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து பிற மத மக்களை நாம் அணுகும் போது நமது கருத்துகளை எப்படி முன் வைப்பது, எதைப் பற்றி ஆரம்பத்தில் கூறுவது என்ற பல கருத்துக்களை பிற மத மக்களிடம் கூற வேண்டியதை மிக அழகாக விள்க்கினார்கள்.

இதில் நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி



அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் அரசு விடுமுறை தினத்தையொட்டி "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)"16-12-2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.


இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார்கள்.

அவரைத் தொடர்ந்து அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 
 
இந்த உரையை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு குழுமியிருந்த மாற்று மத சகோதரர்களுக்கு தேனீர் விநியோகிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளையுல் தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. நபிகளார் அவர்கள் 25 வயதில், 40 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டது ஏன்?
  2. சாதாரண மனிதராக தற்போதுள்ள நீங்கள் MLA, MP ஆனால் இதே சிந்தாந்தத்தை கூறுவீர்களா?
  3. மாற்று மதத்தவர்களை ஏன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமியர்கள் தடுக்கிறார்கள்? 
  4. காதல் திருமணத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
  5. பலதர மணத்தை இஸ்லாம் ஏன் ஆதரிக்கிறது?
இது போன்ற இன்னும் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

இந்த நிகழ்ச்சியின் சிறந்த 2 கேள்விகளுக்கு 2 குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த அனைத்து மாற்று மத நண்பர்களுக்கும் இலவசமாக அநேக புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவையாவன,
  1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மத நண்பர்களுக்கான கேள்வி பதில்கள்)
  2. இஸ்லாம் பெண் அடிமை தனத்தை ஆதரிக்கின்றதா?
  3. திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள்
  4. அர்த்தமுள்ள இஸ்லாம்
  5. வருமுன் உரைத்த இஸ்லாம்
மேலும் இலவசமாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் CD-களும் வழங்கப்பட்டன.

பிறகு மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் முடிவுரை கூறி, வந்திருந்த சகோதரர்களை தங்களின் கருத்துக்கள் தெரிவிக்கும் படி அழைத்தார். அதை கேட்ட மாத்திரத்திலேயே மாற்று மத சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து தத்தமது கருத்துக்களை கூறினார்கள்.

மேலும் அதிகமக இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறும், அதனாலேதான் நமது சகோதரத்துவம் இன்னும் சிறப்பாக வளரும் எனவும் தமது கருத்துக்களை பதிந்தனர்.

பிறகு மாற்று மத நண்பர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு சபை களைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

சிறப்பு தாஇயி பயிற்சி முகாம்



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சகோ. ஹாமின் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் நமது மண்டல நிர்வாகிகளான, சகோதரர் முபாரக், ஜெய்லானி, ஜாஹிர், மாஹின், நிரஞ்சன் ஒலி, அரஃபாத் ஆகியோர் கலந்து கொண்டு 10 நிமிட அளவிலான ஒரு சிறிய உரையை நிகழ்த்தினார்கள். 


இவர்களின் உரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரான, சகோதரர் ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கி, சகோதரர்கள் ஆற்றிய உரையின் பிழைகளை மேற்கொள்காட்டினார்.

மேலும், இனிவரும் காலங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

ஹித் சிறப்பு நிகழ்ச்சி (16-12-2011)


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் அரசு விடுமுறை தினத்தையொட்டி அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்களை தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நமது ஜமாஅத் சார்பில் அரங்க்கேற்றப்பட்டது.

இதன் முதல் கட்டமாக, நமது ஹித் கிளையில் வாரம் ஒரு முறை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து இந்த வாரம் (16-12-2011) சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டுள்ள சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார்கள்.

இவர் தனது உரையில் தியாகத்தைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ள அநேக வசனங்களில் ஒரு சில வசனங்களை மேற்கோள் காட்டினார். மேலும் அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வராலாற்றிலிருந்தும் ஒரு சில செய்திகளை நமக்கு சுட்டிக்காட்டி அறிவுரை கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியை நமது ஹித் கிளை சகோதரர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Sunday, December 11, 2011

நபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை



மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]

உரிமைகளை மீறாதீர்!

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)

சொர்க்கம் செல்ல வழி!

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இறுதி இறை வசனம்.

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

Friday, December 9, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 09-12-2011



அல்லாஹ்வின் திருப்பெயரால்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 09-12-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது. 

இன்றைய நிகழ்ச்சியில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "சிந்தனை செய் மனமே" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 09-12-2011



அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சியில் நமது பஹ்ரைன் மண்டல செயலாளர் சகோ.ஜாகிர் ஹுசைன் அவர்கள்“ஆய்வு செய்து பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

நன்மைகள் தரும் மென்மை


நன்மைகள் தரும் மென்மை


இயந்திரமயமாகிவிட்ட நவீன உலகம் அறிவியல் பூர்வமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மேலும் முன்னேற்றங் களை, அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுகின்றது. ஒரு பக்கம் இந்த முன்னேற்றங்கள் மனித சமுதயாத்திற்கு நன்மை பயப்பவையாக இருந்தாலும் மறுபக்கம் இவைகளால் மனித குலத்திற்கு சில கேடுகள், தீமைகள் விழைவதையும் மறுப்பதற்கில்லை.

செல்போன், டி.வி, இண்டர்நெட் போன்ற அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை விட மனிதர்களின் அறிவை மழுங்கச் செய்யும் காரியத்திற்கும், அவர்களின் ஒழுக்க வாழ்வை நாசப்படுத்துவற்குமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மனிதர்கள் இக்கருவிகளால் தங்களுக்கு தாங்களே கேடு விழைவித்து கொள்கின்றனர்.

நவீன கருவிகளில் மனிதர்கள் தொலைந்து விட்டதால் அவர்கள் இழந்த இழப்புகள் ஏராளம். வளமான வாழ்வு நல்ல நட்பு, குழந்தைகளின் பாசம், நல்லறிவு, நற்பண்புகள் இவ்வாறாக மனிதர்கள் தொலைத்த நன்மைகள் பல. இவற்றுள் மென்மையும் ஒன்று.

இக்காலத்தில் அதிகமானோர் மென்மை எனும் குணத்தை இழந்தவர்களாக, நளினத்தை தவறவிட்டவர்களாக இருக்கின்றார்கள். எப்போதும் பரபரவென்று இருப்பது, குழந்தைகள் உட்பட யாரைப்பார்த்தாலும் அவர்கள் மேல் எரிந்து விழுவது, சிறிய விஷயத்திற்கும் கடுமையாக நடந்து கொள்வது போன்ற அணுகுமுறைகளையே பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். மொத்தத்தில் மென்மை எனும் பொன்னை, புதையலை, பொக்கிஷத்தை புறக்கணித்தவர்களாக தங்களுடைய வாழ்வை ஆக்கிக் கொண்டனர்.

மென்மைக்கு இருக்கும் மவுசை அறிந்து கொண்டால்... அறிந்து கொள்வோமே. பிறகு அதன் மூலம் இறைவன் பல மாற்றங்களை தருவான் என்று நம்புவோம்.

மென்மை இழந்தவன் நன்மை இழந்தான்
"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார். அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : முஸ்லிம் 5052

பிறரிடத்தில் நளினமாக, மென்மையாக நடந்து கொள்ளும் பக்குவம் இழந்தவர் எந்த நன்மையையும் பெறமுடியாது என்று நபிகளார் கூறுகின்றார்கள்.

நபிகளாரின் இக்கருத்து நூற்றுக்கு நூறு உண்மை என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நல்லோர்களின் சகவாசத்தால் பல நன்மைகளை நாம் பெறுகிறோம். அவருடைய நல்ல பழக்கவழக்கங்கள், அவர்களின் மூலம் கிடைக்கும் நல்ல நண்பர்கள், நமது முன்னேற்றத்திற்கான வழிகள் என பல நன்மைகள் அவர்கள் வாயிலாக கிடைக்கப் பெறுகின்றது. அவர்கள் நம்மிடம் நெருங்கி பழகுவதாலே இந்நன்மைகள் ஏற்படுகின்றது.. இதுவே நாம் கடினத்தன்மை கொண்டவர்களாக இருந்தால் இவர்கள் நம்மிடம் ஒட்டுவார்களா? ஒன்று அறவே நம்மிடம் ஒட்ட மாட்டார்கள். அல்லது அளவோடு நிறுத்திக் கொள்வார்கள். நாம் மென்மையாக அவர்களிடம் நடந்து கொண்டால் தான் நம்முடன் பழகுவதை தொடர்வார்கள். அவர்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளும் தொடரும். எனவே மென்மையாக நடந்து கொள்ளும் குணம் நம்மிடம் இல்லையானால் அதனால் நாம் ஏராளமான இழப்புகளுக்கு ஆளாகிறோம் என்ற நபிகளாரின் கருத்தை மனதில் பதியச் செய்ய வேண்டும்.

மென்மை தரும் நன்மைகள்

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம், ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்' என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 5055

மென்மை எனும் குணம் இறைவன் விரும்பும் குணம் என்றும், அதற்கு மற்றவைகளை விடவும் ஏராளமான சன்மானங்களையும், வெகுமதிகளையும் இறைவன் வழங்குவதாகவும் நபிகளார் தெரிவிக்கின்றார்கள். நபிகளாரின் இந்த ஒரு செய்தியிலேயே மென்மையின் மவுசு பளிச்சிடுவதை காணலாம்.

மென்மையால் மக்களை வென்றெடுத்த நபிகளார்

மது, மாது, சூது, விபச்சாரம் போன்றவைகள் மலிந்திருந்த காலம் அறியாமைக்காலம். இவைகள் தான் அக்காலத்து மக்களின் அன்றாட பொழுது போக்குகள். இவைகளை செய்பவர் முழுமையான மனிதராகவும், செய்யாதோர் கேவலமாகவும் பார்க்கப்பட்ட காலம். இக்காலத்து மக்களிடையே தான் நபிகளார் சத்தியப்பிரசசாரம் செய்து அவர்களை, பண்புள்ளவர்களா, ஒழுக்கசீலர்களாக, தியாகிகளாக வார்த்தெடுத்தார்கள்.

இறுதியில் நபிகளாருக்காக எதையும் இழப்பதற்கு அது உயிராக இருந்தாலும் தயார் எனுமளவில் ஒரு பெரும் கூட்டம் உருவாகியிருந்தது. காட்டுமிராண்டித்தனாமான குணங்கள் கொண்டவர்களை இந்த நிலைக்கு மாற்றியதற்கு முழுமுதற்காரணம் நபிகளாரின் மென்மையான அணுகுமுறையே.

அனைத்து மக்களையும் நபிகளார் வென்றெடுத்ததற்கு அவர்களின் மென்மையான அணுகுமுறை ஒரு காரணம். இதை இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

"(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அல்குர்ஆன் 3 : 159

சத்தியக் கொள்கையின் பால் மக்களை வென்றெடுக்க நபிகளார் தன் கைவசம் வைத்திருந்த மென்மை எனும் வழிமுறையை நாம் நம் வசமாக்கினால் அதற்கான பலன் கிடைப்பது உறுதி.

வெறுமனே நபிகளார் நளினமாக நடந்து கொண்டார்கள் என்று கூறுவதை விட அதற்கு சில சம்பவங்களை குறிப்பிட்டால் பொருத்தமானதாய் அமையும். எனவே நபிகளார் தன்னுடைய மென்மையான அணுகுமுறையை வெளிப்படுத்திய சில நிகழ்ச்சிகள் :

வன்மையாளரிடம் மென்மை

"நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின், ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்' என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தர விட்டார்கள். அறிவிப்பவர்: அன்ஸ் பின் மாலிக் (ரலி), நூல் : புகாரி 3149

ஒருமுறை நபியவர்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் யாசிப்பவர் நபிகளாரிடம் கடுமையாக நடந்து கொண்டு, நபிகளார் அணிந்திருந்த சால்வையினால் காயப்படுத்தி செல்வத்தை கேட்கின்றார். இவ்வாறு வன்மையாக நடந்து கொண்டவரிடமும் நபியவர்கள் சிரித்தவாறே மென்மையாக நடந்தார்கள் என்று இந்த சம்பவம் உணர்த்துகின்றது.

தன்னை திட்டியவரிடம் மென்மை

"நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு, வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (-அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று சொன்னார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் தான் வஅலைக்கும் (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள். நூல் : முஸ்லிம் 6024

நம்மை நோக்கி ஒருவர் எல்லை மீறி ஒரு வார்த்தையை உதிர்த்தால் பதிலுக்கு பல வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது தான் நமது வழக்கம். ஆனால் தன்னை திட்டியவருக்கு பதிலடி கொடுப்பதிலும் எல்லை மீறாமல் நபியவர்கள் நளினத்தை கடைபிடித்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. அப்போதும் ஆயிஷா (ரலி) அவர்கள் கடுமையாக நடந்து கொள்வதை கண்டிக்கின்ற நபியவர்களின் உத்தமும் மின்னுகின்றது..

மாற்று மதத்தவர்களிடம் நளினம்

"ஒரு கிராமவாசி பள்ளிவாசரினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது. அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : முஸ்லிம் 6025

பள்ளியினுள் சிறுநீர் கழித்த மாற்று மதத்தவரிடம் நபிகள் நாயகம் அணுகிய நளினம், இது தான் நபியவர்களை பிற மதத்தவர்களையும் நேசிக்கச் செய்தது. நற்குணத்தில் நாயகராகவே நபிகள் நாயகம் திகழ்ந்திருக்கின்றார்கள், இன்றளவும் திகழ்கின்றார்கள் என்பதை இது பறைசாற்றுகின்றது.

மனிதனை அழகுபடுத்தும் மென்மை

"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 5056

எல்லாவற்றிலும் மென்மை தான் அழகு என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். ஏனைய பொருள்கள் என்ன தான் அழகாக இருந்தாலும் மென்மையான பொருள் அவைகளை விட அழகாக மிளிர்வதை உணரலாம். ஆதலால் தான் பலரையும் அது கவர்ந்திழுக்கக்கூடியதாக இருக்கின்றது. மென்மையாக இருப்பது மண், இலை போன்று எதுவாக இருந்தாலும் மனிதர்களை கவரக்கூடியதாக விளங்குகிறது.

அந்த மென்மை மனிதர்களிடம் இருக்குமானால் அது மனிதர்களையும் அழகாக்கிவிடும் என்பதை தான் நபிகளார் இந்த ஹதீஸில் கூறுகின் றார்கள்.

கடனாளியிடம் மென்மை; கிடைப்பது பாவமன்னிப்பு

நாம் ஒருவருக்கு கடன் வழங்கி, அவர் குறித்த நாளுக்குள் தரவில்லையானால் அவரிடம் சற்று கடினமாக நடந்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. (பார்க்க புகாரி 2390) எனினும் அக்கடனாளியிடம் நாம் தாராள மனதுடன் மென்மையாக நடந்து கொண்டால் இறைவனும் நம்மிடத்தில் மறுமையில் மென்மையாக நடந்து கொள்கின்றான். நமது பாவங்களை மன்னிக்கின்றான். மென்மையான அணுகுமுறையால் கிடைக்கும் மற்றுமொரு நன்மை இது.

"அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்? என்று கேட்டான். (அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.) அதற்கு அந்த அடியார், இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்துகொள்வேன். சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்' என்று சொன்னார். அதற்கு அல்லாஹ், இவ்வாறு பெருந்தன்மையுடன் நடப்பதற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்' என்று (வானவர்களிடம்) கூறினான். அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி), நூல் : முஸ்லிம் 3181

குழந்தைகளிடம் மென்மை

இன்று எதுவுமறியாத குழந்தைகளிடம் சிறுவர்களிடம் கூட முரட்டுத்தனமாக, கடுமையாக நடந்து கொள்பவர்கள் உள்ளனர். (மார்க்க விஷயத்தில் கண்டிப்பதை குறிக்காது) அவர்களிடம் சிறு தவறு நிகழ்ந்தாலோ, ஒன்றுமே நிகழாவிட்டாலும் குழந்தைகளை மிரட்டுவதை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர். நபியவர்கள் சிறுவர்களிடம் நளினமாக பழகக்கூடியர்களாக இருந்துள்ளார்கள்.

"அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற் கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் அபூஉமைரே! பாடும் உனது சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று என்று கூடக் கேட்பார்கள். நூல் : புகாரி 6129

சிறுவர்களிடம் நளினமாக நடந்து கொள்வதே அவர்களை பண்படுத்துவதற்கு உதவியாய் இருக்கும் என்பதை அறிந்து கொண்டால் வளமான வாழ்வை நோக்கி அச்சிறுவர்களை அழைத்து செல்லலாம். அதை விடுத்து அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வோம் எனில் நம்மை விட்டும் அவர்கள் விரண்டோடுவதற்கே அது உதவும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

குறிப்பு : எல்லா சந்தர்ப்பங்களிலும் மென்மையாக நடந்து கொள்வது சரியாக இருக்காது. நம்முடைய கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய சில இடங்களில் கொஞ்சம் கடுமையாகவும நடந்து கொள்ள வேண்டும். நமது குழந்தைகள், குடும்பத்தினர்கள் ஒரு தீமையில் ஈடுபட முயல்கிறார்கள் எனில் அதை தடுக்கும் பொறுப்பு நம்மை சார்ந்தது. அவ்விடத்தில் மென்மையாக நடந்தால் முடிவு எதிர்வினையைத்தான் தரும். எனவே அது போன்ற இடங்களில் சற்று கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே மார்க்கத்தின் நிலைப்பாடு.

விலங்குகளிடமும் மென்மை

"ஆயிஷா (ரலி) அவர்கள் (பயணத்துக்குப் பழக்கப்படாத) முரட்டு சுபாவமுடைய ஒட்டகம் ஒன்றில் ஏறிச் சென்றார்கள். அப்போது அதை விரட்டலானார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆயிஷா! நளினத்தைக் கையாள்வாயாக என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.  அறிவிப்பவர்: ஆயிஷா ரலி நூல் : முஸ்லிம் 5057

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடமும் நாம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நபிகளார் இந்த செய்தியில் கூறுகின்றார்கள். ஆனால் நடைமுறையில் மாடு, எருமை, கழுதை போன்ற விலங்குகளை காட்டுமிராண்டித்தனமாக சாட்டையடி, மற்றும் அதிக பளு சுமத்தி வதைக்கின்றார்கள். ஒரு முஸ்லிம் அனைத்து விலங்குகளிடம் மென்மையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம். 
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்