Showing posts with label நபிமார்கள் வரலாறு. Show all posts
Showing posts with label நபிமார்கள் வரலாறு. Show all posts

Wednesday, July 13, 2011

நபிமார்கள் வரலாறு 8 (ஆதம் நபி வரலாறு 4)

முதல் மனிதர் ஆதாமா? ஏவாளா? என்பதைப் பற்றிய செய்திகளை இது வரை நாம் பார்த்தோம். இந்தத் தொடரில் ஆதம் நபியவர்களின் உருவாக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.

ஆதம் நபியின் உருவாக்கமும், மலக்குகளின் ஆட்சேபனையும்.

இந்த உலகத்தைப் படைத்த இறைவன், அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந் நேரத்தில் அந்த மலக்குகள் இறைவனின் எண்ணத்தை ஆட்சேபித்து கருத்துத் தெரிவித்தார்கள்.இதனை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறது.

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன். என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, அங்கே குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னை புகழ்ந்து போற்றுகிறோமே, குறைகள் அற்றவன் என்று உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே என்று கேட்டனர். நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று இறைவன் கூறினான். (அல் குர்ஆன் 2:30)
இறைவன் ஒரு முடிவெடுத்து விட்டு அதனை வானவர்களிடம் கூறிக் காட்டுகிறான், அப்போது அந்த முடிவிற்கு மாற்றமாக மலக்குமார்கள் தங்கள் கருத்தை சொல்கிறார்கள். அதாவது உலகில் மனித இனத்தைப் படைக்க கூடாது என்று சொல்கிறார்கள்.

அதற்கு இறைவன் சொன்ன பதில் மிகவும் கவணிக்கத் தக்கதாகும்.

அதாவது இறைவனின் வார்த்தைக்கு மேல் எவறுடைய வார்த்தைக்கும் முக்கியத்துவம் கிடையாது. இறைவன் ஒரு முடிவெடுத்து விட்டால் அதனை ஆட்சேபிக்கும் உரிமை எவறுக்கும் கிடையாது. அதனால் தான் “நீங்கள் அறியாதவற்றை நான் அறிகிறேன்” என்று இறைவன் வானவர்களுக்கு பதில் கொடுக்கிறான்.

அப்படியானால் இறைவன் வானவர்களிடம் ஏன் மனித உருவாக்கத்தைப் பற்றி கேட்க வேண்டும் கேட்க்காமலே இருந்திருக்கலாமே என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாத்துதான்.

தான் இறைவன் என்பதையும் தான் நினைத்தால் அது சரியாகத் தான் இருக்கும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே அல்லாஹ் அப்படி செய்கிறான்.

ஏன் என்றால் இறைவன் என்றால் அவன் நினைத்ததை முடிப்பவன் என்பதுதான் அவனுடைய இலக்கணம். மனிதனைப் படைக்க வேண்டும் என்று இறைவன் முடிவெடுத்து விட்டு அந்தச் செய்தியை வானவர்களிடம் சொன்னால் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அதற்கு உடன் பட்ட கருத்துக்கு வர வேண்டும். இறைவனின் கருத்துக்கு மாற்றமாக அவர்கள் கருத்துச் சொல்வதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்பதே யதார்த்தம்.

தனது கருத்துக்கு மாற்றமாக மலக்குமார்கள் கருத்துத் தெரிவித்ததை இறைவன் கண்டித்தான். தான் கண்டித்தது சரியானது என்பதையும், மலக்குமார்கள் நினைத்தது தவறு என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவதற்காக இறைவன் ஒரு பரீட்சையை வைத்தான்.

மனிதனின் வெற்றியும், மலக்குகளின் தோல்வியும்.

இறைவன் வைத்த பரீட்சையைப் பற்றி திரு மறைக் குர்ஆன் இவ்வாறு பேசுகிறது. 

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்” என்று கேட்டான். (அல் குர்ஆன் 2:31)

இறைவன் வைத்த பரீட்சைக்கு வானவர்களினால் முகம் கொடுக்க முடியவில்லை தங்கள் தோல்வியை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.

“நீ தூயவன் நீ எங்களுக்க கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன், ஞானமிக்கவன்” என்று அவர்கள் கூறினர். (அல் குர்ஆன் 2:32)

வானவர்கள் தங்கள் தோழ்வியை தாமாக முன் வந்து ஒத்துக் கொண்டாலும் வானவர்களின் ஆட்சேபனையை மீறி படைக்கப்பட்ட ஆதம் நபியவர்களின் திறமையை வானவர்களுக்கு இறைவன் காட்டினான்.

“ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!” என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது “வானங்களிலும், புமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?” என (இறைவன்) கேட்டான். (அல் குர்ஆன் 2:33)

மலக்குமார்களுக்கு சொல்ல முடியாமல் போன பெயர்களை எல்லாம் ஆதம் நபியவர்கள் சொல்லிக் காட்டினார்கள் இதன் மூலம் தான் நினைத்தால் அவற்றை யாரும் ஆட்சேபிக்கக் கூடாது என்பதையும், ஆட்சேபித்தால் அது தவறு என்பதையும் மனித குலம் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு மலக்குமார்கள் விஷயத்தில் இறைவன் தெளிவு படுத்திவிட்டான்.

கலீபா என்ற சொல்லின் விளக்கம்.

மனிதனை இறைவன் படைக் எண்ணி மலக்குமார்களிடம் கருத்துக் கேட்ட நேரம் “அங்கே குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்?” என்று கூறி ஆட்சேபனை தெரிவித்தார்கள். இந்த ஆட்சேபனையை சிலர் தவறான விளக்கம் கொடுத்து தங்கள் கருத்தை நிலை நிறுத்த முனைகிறார்கள்.

நபி ஆதம் (அலை) அவர்களின் வாழ்வோடு தொடர்புடைய செய்தி என்பதினால் அதைப் பற்றிய விளக்கத்தையும் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்.

அதாவது மறைவான ஞானம், மறைவானவற்றை அறியும் ஆற்றல் இறைவனிடம் மாத்திரமே உள்ளது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு.

மறைவான ஞானம் பெரியார்களுக்கும், மகான்களுக்கும் கூட உண்டு என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இந்த வசனத்தை காட்டி மலக்குமார்களுக்கும் கூட மறைவான ஞானம் இருந்ததினால் தான் மேற்கண்டவாரு தெரிவித்தார்கள் என்று வாதிடுகிறார்கள். ஆனால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறான பொய்யான வாதமாகும். 

மேற்கண்ட வசனத்தில் “புமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” என்று இறைவன் கூறும் இடத்தில் தலைமுறை என்பதைக் குறிக்க கலீஃபா (இன்னி ஜாஇலுன் பில் அர்ழி கலீஃபா) என்ற வாசகத்தைப் பயன்படுத்துகிறான். இந்த வாசகத்தை வைத்துத் தான் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மலக்குமார்கள் அடையாளம் கண்டு கொண்டார்களே தவிர அவர்களுக்கு மறைவான ஞானம் என்பது கிடையாது.

கலீஃபா எனும் அரபிச் சொல் "ஒருவர் இறந்த பின், அல்லது அவர் செயலற்றுப் போன பின் அவரது இடத்தைப் பெறுபவர்'' என்ற பொருளில் குர்ஆனில் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பெண்ணின் கணவர் இறந்த பின் இன்னொருவரை அப்பெண் மணந்தால் இரண்டாம் கணவரை முதல் கணவரின் கலீஃபா எனலாம். முதல் கணவரின் இடத்தை அவர் நிறைவு செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். ஹதீஸ்களிலும் இதற்குச் சான்று உண்டு. (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மத் 25417)

மனிதன் வழிவழியாகப் பெருகி வருகிறான். இவ்வாறு வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் என்ற பொருளிலும் கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை கலீஃபா எனக் கூறியது இந்தக் கருத்தில் தான். அதனால் தான் ஒரு கலீஃபாவைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் கூறியவுடன் ஒரே ஒரு மனிதர் மட்டும் படைக்கப்பட்டால் எப்படி இரத்தம் சிந்த முடியும் என்று எண்ணாமல் "அவர்கள் இரத்தம் சிந்துவார்களே' என்று வானவர்கள் கூறினர்.

இந்தச் சொல்லிலிருந்து ஆதமுக்கு ஒரு துணைவி படைக்கப்படுவார் என்பதையும், அவ்விருவர் வழியாக மக்கள் பெருகி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பதையும் வானவர்கள் விளங்கிக் கொண்டனர்.

எனவே ஆதம் (அலை) அவர்களைப் பற்றிக் கூறும் இடங்களில் வழி வழியாகப் பல்கிப் பெருகுபவர் (தலை முறை) என்ற பொருளிலும் மற்றவர்களைக் குறித்து கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும் போது முந்தையவர்களின் இடத்தை நிரப்பியவர்கள் என்ற பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்கு மற்றொரு மனிதன் பிரதிநிதியாக இருக்க முடியும் (அல் குர்ஆன் 7:142).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் பிரதி நிதியாக இருந்து செயல்பட்ட அபூபக்ர் (ரலி) அவர்களை கலீஃபா (நபிகள் நாயகத்தின் பிரதிநிதி) என்று அழைத்ததும் இந்தப் பொருளில் தான்.

இறைவன் மறைய மாட்டான், செயலற்றுப் போகவும் மாட்டான் என்பதால் அவனுக்குப் பிரதிநிதியாக யாரும் இருக்க முடியாது.

அல்லாஹ் மனிதனுக்குப் பிரதிநிதியாவான். (நூல்: முஸ்லிம் 2392) அல்லாஹ் வுக்கு மனிதன் பிரதிநிதியாக முடியாது.

கலீஃபாவுக்கு அல்லாஹ்வின் பிரதிநிதி என்று சிலர் மொழி பெயர்த்திருப்பது மிகவும் தவறாகும்.(மேலதிக தகவல்களுக்கு 2:30, 6:133, 6:165, 7:69, 7:74, 7:129, 7:142, 7:150, 7:169, 10:14, 10:73, 11:57, 19:59, 24:55, 27:62, 35:39, 38:26, 43:60, 57:7)
வரலாறு தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆசிரியர்  : Rasmin Misc

Monday, July 4, 2011

நபிமார்கள் வரலாறு 7 (ஆதம் நபி வரலாறு 3)

நாத்தீகத்தின் முரண்பாடும் ஆத்தீகத்தின் நீரூபனமும்


உலகின் முதல் மனிதர் யார் என்பதை சொல்வதற்கு முன் மனிதன் படைக்கப் பட்டானா பரிணாமம் பெற்றானா என்ற கேள்விக்குறிய பதிலை பார்த்தோம்.

இப்போது முதல் மனிதன் ஆதாமா? ஏவாளா என்ற சர்ச்சைக்கு தீர்வு காண முயல்வோம்.

நாத்தீகத்திற்கு வக்காலத்து வாங்கும் சில எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் ஆத்தீகத்தை எதிர்பார்ப்பதற்கான மிக முக்கிய வாதங்களில் ஒன்றாக முதல் மனிதர் ஆதாம் அல்ல முதல் மனிதர் ஏவால்தான் என்று சொல்கிறார்கள் அப்படி சொல்வதற்குறிய காரணத்தையும் வாதத்தினையும் ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்வோம்.

நாத்தீகத்தின் வாதம் :

சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் காலடித்தடத்தை இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அந்தக் காலடித்தடங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இவள் ஒரு பெண் இவள்தான் உலகின் முதல் மனிதர் என்று கூறுகிறார்கள்.

ஆத்தீகத்தின் பதில் :


அதாவது மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் காலடித்தடம் ஆய்வு செய்யப்படுகிறது அந்த ஆய்வில் இது ஒரு பெண்ணின் காலடித்தடம் என்றும் அவள்தான் உலகின் முதல் மனிதர் என்றும் விஞ்ஞானிகள் முடிவு செய்கிறார்கள்.

இதுதான் அவர்கள் வைக்கும் முதல் வாதம்.

அதாவது மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் காலடியை ஆய்வு செய்தால் அவர் பெண்ணா அல்லது ஆணா என்ற முடிவை சொன்னால் எந்த அறிவாளியும் அதனை மறுக்க மாட்டான் ஆனால் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என்பதுதான் அவர் முதல் மனிதர் என்பதற்கான ஆதாரம் என்று யாராவது சொன்னால் அதை எந்த அறிவாளியாவது ஏற்றுக்கொள்வானா?

குறிப்பிட்ட காலடித்தடத்திற்கு சொந்தக்காரர் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என்பதால் அவருக்கு முன்பு யாரும் இல்லை அல்லது பிறக்கவில்லை என்று நிருவுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அத்துடன் உலகில் பிறந்த எந்த மனிதனானாலும் அவர்களால் அவர்களின் பலத்தை கொண்டு கற்களில் அடையாளங்களை சிற்பங்களை உண்டு பண்ண முடியுமே தவிர நடக்கும் போதே கால் வைக்கும் இடமெல்லாம் அடையாளம் விழுந்து அதை மூன்று லட்சம் ஆண்டுகள் வரை தாக்குப்பிடித்திருக்கும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நாத்தீகம் சொல்வதைப் போல் குறிப்பிட்ட காலடித்தடம் எது என்பது விஞ்ஞானத்தினால் நிரூபிக்கப்படவோ அல்லது காண்பிக்கப்படவோ இல்லை.வாய் வழியாக வரும் ஒரு கதைதான் இதே தவிர ஆய்வு அல்ல.

நாத்தீகத்தின் வாதம் :

முதல் மனிதர் ஆதாமாக இருந்தால் எப்படி குழந்தை பிறக்கும் அவர்தான் ஆனாயிற்றே?

ஆத்தீகத்தின் பதில் :

முதல் மனிதர் ஏவாள் என்று வைத்துக் கொண்டாலும் இந்தக் கேள்வி எழவே செய்யும்.

முதல் மனிதர் ஏவாள் என்றால் அவர் யாருடன் குடும்பவாழ்வில் ஈடுபட்டார்?

ஒரு பெண்ணுக்கு கண்டிப்பாக ஆண் துணை வேண்டும் ஆண் துணையுடன் அவள் குடும்ப உறவில் ஈடுபடாமல் எப்படி குழந்தையைப் பெற்றெடுப்பாள்.

(குளோனிங் மூலம் குழந்தை பெருவது என்பது தற்கால விஞ்ஞானம் அதனை திருமறைக் குர்ஆனும் ஏற்றுக் கொள்கிறது.இதைப் பற்றிய செய்திகள் பின்னர் விளக்கப் படும்.)

நாத்தீகத்தின் வாதம் :

ஆண் வர்க்கத்தின் துணையின்றி தாங்களாகவே இனவிருத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் உலகில் உள்ளது.உதாரணத்திற்கு அஃபிட்ஸ் என்கிற ஈ வகை ஆண் துணை இன்றி தானே வம்ச விருத்தி செய்து கொள்கிறது.

அது போல் ஏவாளும் வம்ச விருத்தி செய்திருப்பாள்.

ஆத்தீகத்தின் பதில் :

ஆண்களின் துணை இல்லாமல் அஃபிட்ஸ் என்கிற ஈ வர்க்கம் இனவிருத்தி செய்து கொள்கிறது.

அது ஆண்களில் துணையைப் பெருவதே இல்லை என்பதுதான் அதற்குறிய பதில் மனிதன் அப்படியல்ல பெண் என்றால் ஆனின் துனையுடன் தான் இனவிருத்தி செய்கிறாள்.

அஃபிட்ஸ்ஸின் வாழ்நாள் பூராகவும் அதன் தன்மை அதுவாகத்தான் இருக்கிறது.

மனிதனுக்கு அப்படி ஏன் ஏற்படவில்லை.

ஏவாளுடன் மாத்திரம் அது ஏன் நின்று விட்டது?

குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றான் என்றால் அது ஏன் தொடரவில்லை என்பதைப் போல் ஏவாள் தானாக இனவிருத்தி செய்து கொண்டால் அது ஏன் தொடரவில்லை?

ஏவாளுடன் மாத்திரம் ஏன் நின்றது?

ஏவாளுடைய எந்தக் குழந்தைக்காவது இந்த நியதி இருப்பதாக நிரூபிக்க முடியுமா?

ஏவாளுக்கே நிரூபிக்க முடியாத போது அவளுடைய பிள்ளைகளுக்கு எப்படி?

குளோனிங் மூலம் குழந்தையை உருவாக்கினால் கூட ஒரு ஆணுடைய விந்தின் உதவி வேண்டும் அதைக் கொண்டு தான் உருவாக்க முடியும் விஞ்ஞானிகளே இப்படித்தான் கூறுகிறார்கள்.பெண்களுக்காக தனியாக குழந்தையை உருவாக்கும் தன்மையை இறைவன் (நாத்தீகத்தின் பார்வையில் இயற்கை)கொடுக்கவில்லை.

நாத்தீகத்தின் வாதம் :

மனிதர்களில் இரண்டு வகையினர் உள்ளார்கள் ஒன்று இப்போது வாழும் நாம் அதாவது க்ரோமேக்ணன்.

இரண்டு நியாண்டதால் அதாவது நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் நாகரீகம் அற்ற கற்களைக் கொண்டு தங்களை தற்காத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்.

ஏவாளும் நியாண்டதால் வகையைச் சார்ந்தவரே அவர்களுக்கு இப்படி ஆண் துணை இல்லாமல் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு தன்மை இருந்திருக்களாம்.

ஆத்தீகத்தின் பதில் :

மனிதர்களை தரம் பிரிக்கும் இந்த அளவு கோள் எங்கிருந்து பெறப்பட்டது.

நியாண்டதால் க்ரோமேக்ணன் என்ற பெயர்கள் நாம் சூட்டிக் கொண்டவைதாம்.
முதலில் நியாண்டதால் என்று ஒரு இனம் வாழ்ந்ததாக யாராலும் நிரூபிக்க முடியாது முதல் மனிதர் ஏவாள் என்பதை எப்படி நிரூபிக்க முடியாதோ அதுபோல் தான் நியாண்டதால் மனிதர்கள் வாழ்ந்ததாக குறிப்பிடும் கதையையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பதை நிரூபிக்க முடியாதலால் அதனை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காக கற்பனையாக உருவாக்கப் பட்டதுதான் நியாண்டதால் கதாபாத்திரமே தவிர விஞ்ஞான ரீதியாகவோ அறிவியலின் படியோ நியாண்டதாலுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

அத்துடன் கற்களை மாத்திரம் வைத்து தங்களை தற்காத்துக் கொண்டார்கள் என்ற வாதத்தை வைத்து அவர்களை நியாண்டதால் என்று பிரிப்பதாக இருந்தாலும் அதுவும் எடுபடாத வாதமாக மாறிவிடும்.

அதாவது கற்களை வைத்து தங்களை தற்காத்துக் கொண்டது ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்கக் கூடியதாக இருந்தாலும் அவர்கள் ஒரு வகையில் நம்மை விட அறிவியலில் முன்னேற்றம் கண்டவர்கள் தான்.

போலி விஞ்ஞானத்தினதும் நாத்தீகத்தினதும் கருத்துப் படி நியாண்டதால் மனிதர்கள் அறிவியலில் முன்னேற்றம் காணாதவர்கள்.

அப்படியெனில் எகிப்திய சமுதாயமும் இந்த நியாண்டதால் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள்தாம்.

அறிவியலுக்கு தொடர்பில்லாத சமுதாயத்தினர் இன்றைய விஞ்ஞானமே ஆச்சரியப்படும் வகையில் அமைந்த பிரமிட்டுக்களை எப்படி உருவாக்கினார்கள்?

நாத்தீகத்தின் வாதம் :

க்ரோமேக்னன் மனிதர்களான நாம் ஹோமோ ஸேபியன் (புத்திசாலித்தனமான மனிதன்)கள் நாமது இனத்தை சேர்ந்தவர்தான் நமது தாய் ஏவாள் நமக்கே இவ்வளவு அறிவு வளர்ச்சி என்றால் ஏவாளுக்கு எவ்வளவு இருந்திருக்கும்?

அந்த ஏவாள் தனக்குத் தானே குழந்தையை பெற்றெடுக்கும் அறிவியலைப் பெற்றிருப்பாள்.

ஆத்தீகத்தின் பதில் :

க்ரோமேக்னன் மனிதர்களான நாம் ஹோமோ ஸேபியன் :- அதாவது புத்திசாலி மனிதர்கள் என்றால் நமது தாய் ஏவாளும் புத்திசாலிதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இந்த ஏவாளினால் உருவாகிய நியாண்டதால் எப்படி இந்த அறிவை இழந்தார்கள்?

ஏவாளுடைய சிறப்பான அறிவு நம்மையே வந்தடையும் போது நமக்கு முற்பட்ட நியாண்டதால்(நாத்தீகம் வைத்த பெயர்)இனத்திற்கு எவ்வளவு அறிவு வளர்ச்சி இருந்திருக்க வேண்டும்?

ஏவாளுக்கிருந்த அறிவின் மூலம் தனே குழந்தையைப் பெற்றெடுத்திருந்தால் அவருடைய எந்தக் குழந்தைக்கும் அந்த அறிவு இல்லையே நாம் உற்பட ஏவாளுடைய எந்தக் குழந்தையும் நாத்தீகம் சொல்வதைப் போல் தனக்குத் தானே குழந்தையை உண்டாக்கவும் இல்லை.


தொடரும் இன்ஷா அல்லாஹ்...
ஆசிரியர் : ரஸ்மின் MISc


Wednesday, June 22, 2011

நபிமார்கள் வரலாறு 6 (ஆதம் நபி வரலாறு 2)

உலகின் முதல் மனிதர் ஆதாமா ஏவாளா?


உலகத்தின் உருவாக்கம் ஒரு மிகப்பெரும் அற்புதம்.அது போல் மனிதனின் உருவாக்கம் அதைவிட அற்புதம்.இந்த இரண்டில் உலகின் தோற்றத்தைப் பற்றி இரண்டுவிதமான கருத்தோட்டங்கள் உண்டு.

முதலாவது உலகம் தானாக இயற்கையாக உருவாகியது என்பதாகும் இது நாத்தீகத்திற்கு கடவுல் இல்லை என்ற கொள்ளைக்கு வக்காலத்து வாங்குவதற்காக உருவாக்கப் பட்ட கருத்து நிலை பெறாமல் பெயருக்காக சொல்லிக் கொள்ளப் படுகிறதே தவிர இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இரண்டாவது உலகைப் படைத்தவன் இறைவன்.இறைவன் படைக்காவிடில் இந்த உலகம் உருவாகியிருக்க முடியாது அவனுடைய ஆற்றலினால் உருவாக்கப் பட்டதினால்தான் நேர்த்தியான ஒரு சீரமைப்பில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த இரண்டு கருத்துக்களில் இதுவரை நிரூபிக்க முடிந்தது இரண்டாவது கருத்தைத்தானே தவிர முதல் கருத்தை அல்ல.முதலாவது கருத்து கடவுல் இல்லை என்று சொல்லப் பட்ட செய்தியை மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்வதற்காக சொல்லப்பட்டதாகும்.

மனிதனின் உருவாக்கம்.

மனிதனின் தோற்றத்தைப் பொருத்தவரை மனிதன் கடவுளினால் படைக்கப் பட்டான் என்று மதங்களும் அறிவியலாளர்களின் ஒரு பகுதியினரும் கூறுகின்றனர்.

இன்னொரு பகுதியினர் இல்லை மனிதன் தானாக உருவாகிய உலகத்தில் இயற்கையின் பருவ நிலை மாற்றத்தினால் குரங்கிலிருந்து பரினாம வளர்ச்சி பெற்று உருவாகியவன் என வாதிடுகின்றனர்.இந்த வாதாட்டத்தின் உண்மை நிலையை முதலில் நாம் அறிய வேண்டும்.

அதாவது மனிதன் படைக்கப் பட்டானா? அல்லது பரிணாம வளர்ச்சி மூலம் உருவானானா? இதுதான் நாம் முதலில் ஆராய வேண்டிய கேள்வி.இந்தக் கேள்விக்குறிய பதிலைப் பார்த்துவிட்டு முதல் மனிதன் யார் ஆதாமா? அல்லது ஏவாளா? என்பதை ஆராய்வோம்.


மனிதன் படைக்கப் பட்டானா? அல்லது பரிணாம வளர்ச்சி மூலம் உருவானானா?

(இது தொடர்பாக அறிஞர் பி.ஜெ அவர்கள் தனது திருக்குர்ஆன் விளக்கத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரையை பதிவு செய்துள்ளார்.அதையே இந்தத் தலைப்பின் விளக்கமாக தருகிறோம்.)

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்ற தத்துவம் கடவுளை மறுப்பதற்கு உதவுவதால் அதைச் சிலர் ஏற்றிப் போற்றுகிறார்களே தவிர அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.

சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!

எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.

குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந் தது எனலாம்.

அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது ஆச்சர்யமாக இருக்கிறது.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.

குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை. பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போனது. அனேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாக வுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும்.

ஆடு மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் வேறுபட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட இது அறிவியல் பூர்வமானது.

இன்றைக்கும் கூட தந்தையின் தோற்றத்தில் மகன் இல்லாத போது டி.என்.. சோதனை மூலம் இவன் தான் தந்தை என்று முடிவு செய்கிறோம். தோற்றத்தைக் கணக்கில் கொள்வதில்லை.

டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?

இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.
வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர்.

ஆச்சரியமாகப் பன்றியின் இதயம் தான் மனிதனின் இதயத்துடன் பெரு மளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித் துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும் அது சாத்தியமற்றது என அறிவிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் எந்தப் பிராணியில் இருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும். டார்வின் கூறும் உடலமைப்பை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கம் உடையதாகும்.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும் மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தால் அல்லது வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தால் டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.

மனிதன் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம் இனம் நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும்.
டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.

இதையெல்லாம் விட மனிதன் உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால் தான் பெறுகிறான்.

உடல் வளர்ச்சிக்கும் உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.

ஒட்டகச்சிவிங்கி சிறிய கழுத்தைப் பெற்றிருந்ததாம். அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி நீட்டி வந்ததால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டது என்று டார்வினிஸ்டுகள் கூறுகின்றனர்.

உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம். இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது. ஆனால் உயிர் வாழ்வதற்குப் பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் ஏதும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை.

பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை.

உயிர் வாழ்வதற்குப் பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் உடல் மாறலாமே தவிர பகுத்தறிவு என்பது வரவே முடியாது.


ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது. யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது? கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது? யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?

பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது தினந்தோறும் சில தாய் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்.

ஏன் அது தொடரவில்லை? இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் பதில் இல்லை.

மனிதனின் இரத்தம் இதயம் ஈரல் சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும் மரபணுக்களும் மனிதன் தனி இனம் எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:30 3:59 4:1 6:2 6:98 7:189 15:26 15:28 22:5 23:12 30:20 32:7 35:11 37:11 38:71 39:6 40:67 49:13 55:14)

- தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆசிரியர் : ரஸ்மின் MISc
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்