Monday, September 12, 2011

ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்...



ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது.  இவ்வளவு சிறப்பும் எதனால்? அல்லாஹ் இம்மாதத்தில் குர்ஆனை இறக்கியருளியதால்!  குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் அம்மாதத்தில் அமைந்திருப்பதால்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த இரவை ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாக ஆக்கி வைத்தான்.  இம்மாதத்தில் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவோருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குவதாக வாக்களித்தான்.  அதன் பலனை சிம்பாலிக்காக வெளிப்படுத்தும் விதமாக சுவனத்தைத் திறந்து வைத்து நரகத்தை மூடினான்.

இதனால் கொஞ்ச நஞ்ச ஈமானிய உணர்வு உள்ளவர்களும் இம்மாதத்தில் அல்லாஹ் அளிக்கும் அரிய வாய்ப்பைப் பெற வேண்டி படையெடுத்து வந்தார்கள்.  உண்மையில் ரமளான் இவர்களை இரவிலும் பகலிலும் சிறைப்படுத்தி வைத்திருந்தது.

அந்த வகையில் ரமளான் அவர்களைக் கைது செய்து, நற்பண்புகளைப் போதித்த ஒரு சிறைச்சாலை!

நல்ல பாடங்களைப் படித்துக் கொடுத்த ஒரு பாடசாலை!

இறையச்சத்தில் ஊனமாகிப் போய் கிடந்த சகோதரர்களை இறையச்சத்தின் பக்கம் நடை பயில வைத்த நடை வண்டி!

இந்த ரமளான் மாதத்தில் பெற்ற பண்புகள் என்ன? பாடங்கள் என்ன? என்று பார்ப்போம்.

ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம்.  இரவு நேரங்களில் தொழுதோம்.  சப்தங்கள் அடங்கிப் போன ஸஹர் நேரத்தில் விழித்து பிரார்த்தனை செய்தோம்.

இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவோரகவும் (இருப்பார்கள்) (அல்குர்ஆன் 3:17)

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்.  இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:17,18)

என்று அல்லாஹ், சுவனத்திற்குரிய முஃமின்களின் பண்புகளைக் கூறுவது போன்று குறைவாக உறங்கி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினோம்.  இவற்றை ஏன் செய்தோம்?  நன்மையை நாடித் தானே செய்தோம்?  இதே காரியத்தை நாம் ரமளானுக்குப் பின்னாலும் தொடர்ந்து செய்தால் என்ன?  இவ்வாறு நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

இந்த அமல்கள் அடுத்த ஆண்டு வரை அல்ல!  ஆயுள் வரை தொடர்வோம்.

ரமளானின் பகல் காலங்களில் அனுமதிக்கப்பட்ட உணவு, பானத்தை சாப்பிட மறுத்தோம்.  ஏன்? அல்லாஹ் தடுத்திருக்கின்றான் என்பதால் தானே!  அப்படியாயின் வட்டி, லாட்டரி, லஞ்சம், மது, சூது, திருட்டு, கொள்ளை, மோசடி இவற்றின் மூலம் வரும் வருவாயை நாம் சாப்பிடலாமா?

நோன்பின் பகல் காலத்தில் தடை பிறப்பித்த அல்லாஹ் தானே இவற்றின் மீது எந்தக் காலத்திலும் தடை விதித்திருக்கின்றான்.  இதுபோன்ற காரியங்களில் நாம் ஈடுபடலாமா? என்பதை உணர்ந்து விலகவே ரமளான் என்ற பள்ளிக்கூடம் நம்மிடம் பாடம் நடத்த வந்தது.  இந்தப் பாடத்தை அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை தொடர்வோம்.

அருகில் அனுமதிக்கப்பட்ட மனைவி படுத்திருக்கின்றாள். அக்கம் பக்கத்தில் யாருமில்லை.  இருந்தும் ரமளானின் பகலில் நோன்புக் காலத்தில் நாம் நெருங்கவில்லையே! ஏன்? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வு தானே!  ரமளான் மறைந்த பின் அல்லாஹ் பார்க்காமல் மறைந்து போய் விடுவானா?  நிச்சயமாக மறைய மாட்டான். அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

நாம் இங்கே படித்த பாடம் நம் மனைவியை ரமளானில் பகல் காலங்களில் நாம் நெருங்காத போது, பிறன் மனையை ஏறிட்டுப் பார்க்கலாமா? அந்நியப் பெண்களைப் பார்க்கலாமா? பெண்களின் அங்க அவயங்களை குளோஸ்அப்பில் காட்டும் டிவி, சினிமாக்களைப் பார்க்கலாமா?

ரமளானில் பார்த்துக் கொண்டிருந்த அதே ரப்புல் ஆலமீன் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற பாடம் நம்மிடம் அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை தொடரட்டும்!

உளூச் செய்கின்றோம். அப்போது தாகத்தால் நாம் தவித்துக் கொண்டிருக்கும் போது வாய் கொப்பளிக்க சுவையான தண்ணீரை வாயில் அனுப்புகின்றோம்.  

தொண்டைக் குழிக்குள் அந்தத் தண்ணீர் இறங்குவதற்கு ஒரு மயிரிழை அளவு தான் இருக்கின்றது.  ஒரு சொட்டு தண்ணீர் இறங்கினால் யாருக்குத் தெரியப் போகின்றது? ஏன் விழுங்கவில்லை? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வு தான்!

அனுமதிக்கப் பட்ட பானத்தையே ரமளானில் பகல் காலத்தில் பருகவில்லையே!  ரமளான் முடிந்த பின்னர் தடுக்கப்பட்ட மது பானங்களை அருந்தலாமா? ரமளானில் பார்த்த அதே நாயன் தான் இப்போதும் பார்க்கின்றான்.  அதனால் ரமளானைப் பாடமாகக் கொண்டு தடை செய்யப் பட்ட பானங்களை ஆயுள் முழுவதும் தொடாமல் விலகுவோமாக!

சங்கிலித் தொடராக புகை பிடிப்பவர்கள், நோன்பு நோற்றதிலிருந்து நோன்பு துறக்கும் நேரம் வரை பீடி, சிகரெட் புகைப்பதில்லை.  உயிர்கொல்லியான இந்த நெருப்புக் கொள்ளிக்கட்டையை வாயில் வைக்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன? அல்லாஹ் பார்க்கின்றான் என்ற காரணம் தானே!  அதே காரணம் ரமளானுக்குப் பிறகு அறுந்து போகுமா?

நோன்பு நோற்கும் போது பார்க்கும் அந்த அல்லாஹ் தான் நோன்பு துறந்த பின் இரவு நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.  ரமளான் முடிந்த பின்னரும் அவன் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதால் நோன்பு நோற்கும் போது புகைப் பழக்கத்தை விட்ட நாம் இப்போதும் அதே இறையச்சத்துடன் விட முடியாதா? முயற்சி செய்தால் முடியும்.  எனவே புகைப் பழக்கத்தை அடுத்த ஆண்டு வரை அல்ல! ஆயுள் வரை விட்டொழிப்போமாக!

ரமளானில் ஏழைக்கு இரங்கினோம். அனாதைகளை அரவணைத்தோம்.  உறவினர்களுக்கு உதவி செய்து அவர்களிடம் ஒன்றிணைந்தோம்.  ஏன்? அல்லாஹ் பார்க்கின்றான் என்று தானே!  ரமளான் முடிந்த பிறகும் அந்தக் காரணம் தொடரும் போது நாமும் இந்த நன்மைகளை ரமளானுக்குப் பிறகு அடுத்த ரமளான் வரை என்றில்லாமல் ஆயுள் வரை தொடர்வோம்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்.  யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால், நான் நோன்பாளி என்று அவர் கூறட்டும் என்ற புகாரி 1904வது ஹதீஸின் படி நோன்புக் காலத்தில் யாரேனும் நம்மிடம் சண்டைக்கு, வம்புக்கு வந்தால் விலகி விடுகின்றோம். ஏன்? ஒரு தரப்பு இறங்கிப் போகின்ற போது எதிர் தரப்பு ஏறுவது கிடையாது.  எகிறிக் குதிப்பது கிடையாது.  இதன் மூலம் ரமளானில் வம்புச் சண்டைக்கு வருவோரிடம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றோம்.

இதே போன்று ரமளானுக்குப் பிறகும் அல்லாஹ் நம்மைப் பார்க்கின்றான் என்ற அடிப்படையில் ஒரு தரப்பாகிய நாம் இறங்கிப் போகின்ற போது அமைதி வாழ்கின்றது.  சுபிட்சம் ஏற்படுகின்றது.  இப்படி சுபிட்சமான பாடத்தை ரமளானுக்குப் பிறகும் அடுத்த ஆண்டு வரையில் அல்ல!  ஆயுள் வரை தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

நன்றி : Rasmin MISc

1 comments:

Anonymous said...

Good Article...

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்